Sunday, August 3, 2014

ஆயிரங்காலத்துப் புன்னகை

காயத்ரி மந்திரத்தை சொல்லிக்கொண்டிருந்தாள் ஊர்மிளா. எதிர்வீட்டு கௌசல்யா போல அவளுக்கு ஸ்பஷ்டமாக சொல்ல வரவில்லை. பழக ஆரம்பித்து இரண்டு நாட்கள்தானே ஆகிறது, போகப்போக கௌசல்யா போல சொல்ல முடியும் என்ற நம்பிக்கை ஊர்மிளாவுக்கு கூடிக்கொண்டே இருந்தது. அதைவிட, தன் அம்மாவின் உடல்நிலை விரைவில் சீராகிவிடும் என்ற எண்ணம் அவளுக்கு அதிகமாக இருந்தது.

ஊர்மிளாவின் அம்மா பக்கவாதத்தால் படுத்த படுக்கையாகி 6 மாதத்திற்கு மேலாகிவிட்டது. அம்மாவை கவனிக்க வேண்டிய பொறுப்பு முழுக்க ஊர்மிளா தலையில்தான்! அண்ணன் எப்போதாவது வந்து பணம் கொடுப்பான். அது பஸ் பயணத்திற்கே போதுமானதாக இருக்காது. அதற்கு மேல் கேட்டால், அண்ணியையும் குழந்தைகளையும் யார் கவனிப்பது என்பதுபோல முகபாவம் காட்டுவான் அண்ணன்.

அரசு மருத்துவமனைதான் அம்மாவின் சிகிச்சைக்கு உதவியாக இருந்தது. முதல் முறை ஆட்டோ பிடித்து, அம்மாவை அழைத்துக்கொண்டு போய் டாக்டரிடம் காட்டி மருந்து-மாத்திரைகளை வாங்கி வருவதற்கு அரைநாளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அதன்பிறகு அம்மாவை கூட்டிக்கொண்டு போக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மாத்திரை தீர்ந்துவிட்டதென்றால், அதற்கான அட்டையை ஊர்மிளாவே எடுத்துக்கொண்டு போய் மருத்துவமனையில் மருந்து-மாத்திரைகளை வாங்கி வந்துவிடுவாள்.

அம்மாவுக்காக மருத்துவமனைக்குப் போகும்போது பஸ்ஸில் பழக்கமானவர்தான் பங்கஜம் பாட்டி. பக்கத்து சீட்டில் உட்கார்ந்த நிமிடத்தில் ஊர்மிளாவின் குலம், கோத்திரத்தை விசாரிக்கத் தொடங்கிய பாட்டி, அம்மாவின் உடல்நிலைக்காக ‘உச்’ கொட்டினார். ஊர்மிளாவும் குடும்பச் சூழ்நிலை மொத்தத்தையும் அவரிடம் கொட்டினாள்.

“தோ..பாருடியம்மா. நாம நன்னா இருக்கிறதும் கஷ்ப்பட்டுண்டிருக்கிறதும் போன ஜென்மத்துப் பலன். என்னதான் டாக்டர் ட்ரீட்மெண்ட் கொடுத்தாலும் பகவான் அனுக்ரகம் வேணும். அதனால நீ வீட்டுல அம்மா காதில் விழுற மாதிரி மந்திரம் சொல்லிண்டிருந்தேனா எல்லாம் ஷேமமாயிடும். பகவான் கைவிடமாட்டான்” – பங்கஜம் பாட்டியின் வார்த்தைகள் ஊர்மிளாவுக்கு ஆறுதலாக இருந்தது. வீட்டிற்கு வந்ததும் காயத்ரி மந்திரம் சொல்லப் பழகினாள். இன்றைக்கு இரண்டாவது நாள்.

அண்ணன் வந்திருந்தான். படுக்கையில் இருந்த அம்மாவைப் பரிதாபமாகப் பார்த்தான். ஏதாவது உதவ வேண்டும் என்று நினைத்தவன், கட்டிலுக்கு கீழே இருந்த பெட்பேனை எடுத்தான். அவன் கொடுத்த காசில்தான் ஊர்மிளா அதை வாங்கியிருந்தாள். அம்மாவை நிமிர்த்தி உட்கார வைத்து, பெட்பேனை சரியாக வைக்க முயற்சித்தான். உடம்பில் தெம்பில்லாத நிலையிலும் “ஊர்மிளா.. ஊர்மிளா-.” என்று அலறினாள் அம்மா.

ஊர்மிளாவால் மந்திரத்தைப் பாதியில் நிறுத்தவும் முடியவில்லை, அம்மாவின் அழைப்பை அலட்சியப்படுத்தவும் முடியவில்லை. உச்சரித்துக்கொண்டே ஓடிவந்தவள், “என்னம்மா?’‘ என்றாள், மந்திரத்தை முடிக்கமுடியாமல் போய்விட்டதே என்ற கவலையில். பெட்பேனுடன் நின்று கொண்டிருந்தான் அண்ணன்.

“அவன்கிட்டேயிருந்து அதை வாங்கி, நீ சரியா வைம்மா” என்றாள் அம்மா. ஊர்மிளா அதை வாங்கிக்கொண்டாள். “அவனை அந்தண்டை போய் இருக்கச் சொல்லு”-அம்மா மறுபடியும் உடம்பில் உள்ள சக்தியைத் திரட்டிப் பேசினாள். அண்ணன் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தான்.

“அம்மா.. அண்ணனே எப்பவாவதுதான் வந்து பார்க்குது. உனக்கு ஏதாவது உதவணும்ங்கிற அக்கறையோடு வந்தா, ஏன் இப்படி விரட்டுறே? அண்ணனையும் நீதானே பெக்தே?”

“தாயும் புள்ளையுமா இருந்தாலும் வாயும் வயிறும் வேறதானே.. நான் பெத்த புள்ளதான்னாலும், ஆம்பளைப் பயல் முன்னாடி இதை வைக்கிறது கஷ்டமா இருக்குடீ. துணியை விலக்கி, பெட்பேனை வச்சி, அப்புறம் அதை துடைச்சி சுத்தம்பண்ணி.. .. எனக்கு தர்மசங்கடமா இருக்கு.”

“ஆபரேஷன் பண்ணுற டாக்டர்கிட்டே இதையெல்லாம் சொல்லுவியா.. அப்படி நினைச்சிக்க வேண்டியதுதான்.”

“அவசரத்துக்கோ ஆபத்துக்கோ அதெல்லாம் பாவமில்ல. ஆனா, நீ இருக்கிறப்ப அவன் இதையெல்லாம் செய்றது எனக்கு கஷ்டமா இருக்குது. உங்கப்பா இப்படி படுத்துக்கிடந்தப்ப அவரு சாகுறவரைக்கும் அவன்தானே பார்த்துக்கிட்டான். நீதான் எனக்கு இருக்கிறியே.. உன்னை ஒருத்தன் கையில் புடிச்சிக் கொடுக்கிற வரைக்கும் செய்யி. அப்புறம் நான் கண்ணை மூடிடுவேன்” -அம்மா சொன்னதைக் கேட்டபடியே பெட்பேன் வைக்க உதவிய ஊர்மிளா, அதன்பிறகு குளித்துவிட்டு வந்து மறுபடியும் மந்திரத்தை சொல்ல ஆரம்பித்துவிட்டாள்.

மாதக்கணக்கில் அம்மாவை கவனித்துக்கொண்டவள், மந்திரங்களையும் நிறைய படித்து மனப்பாடமாக சொல்வதற்கு பழகிக்கொண்டாள். லட்சார்ச்சனை, கோடியர்ச்சனை எல்லாம் அவளுக்கு இப்போது அத்துப்படி. அம்மாவைப் பார்ப்பதற்காக வந்திருந்தன சொந்த பந்தங்கள். ஊர்மிளா அநாயாசமாக மந்திரங்களை சொல்வதை கவனித்த உறவுக்காரர் ஒருவர், “நம்ம விட்டல் ருக்மணிதேவி கோவிலில் எல்லா சாதிக்காரங்களையும் அர்ச்சகராக்கப் போறாங்களாம். கோர்ட்டுல தீர்ப்பாயிடிச்சி” என்றார்.

“அப்படியா?” என்று ஆச்சரியமாகக் கேட்ட இன்னொருவர், “இந்த மகாராஷ்ட்ரா பந்தார்பூரிலே இருக்கிற கோவில்தானே… கிட்டதட்ட 900 வருசம் பழமையான கோவிலாச்சே.. ஆகமம், ஆச்சாரமெல்லாம் பேசுவாங்களே.. அதிலே எல்லா சாதிக்காரங்களும் அர்ச்சகராகப் போறாங்களா?” என்றார். “பொண்ணுங்களைக்கூட அர்ச்சகராப் போடப்போறாங்களாம்” என்ற முதலாமவர், ’ஊர்மிளா நீகூட ட்ரை பண்ணலாம்” என்றதும் எல்லோரும் கலகலவென சிரித்தனர். ஊர்மிளா யோசித்தாள்.

வேலை, வருமானம் என்று இருந்தால் அம்மாவைக் கவனித்துக்கொள்வதற்கு வசதியாக இருக்கும் என்பதுதான் அவளது எண்ணமாக இருந்தது. அடுத்த முறை பஸ் பயணத்தின்போது பங்கஜம் பாட்டி தவறாமல் வந்தார். அர்ச்சகராவதற்கு முறைப்படியான பயிற்சிகள் பெறவேண்டும் என்றும் அந்தப் பயிற்சி கொடுக்கப்படும் இடத்தைப் பற்றியும் பங்கஜம் பாட்டி சொன்னார். அதோடு, “அதெல்லாம் பகவான் கிருபையால வர்றது. சும்மா ட்ரெய்னிங்னு இவா நடத்துற க்ளாஸெல்லாம் சரிப்படாது” என்றும் சொன்னார். பாட்டி முதலில் சொன்னதிலேயே ஊர்மிளாவின் மனது நிலைத்துவிட்டதால், அடுத்துச் சொன்னதை அவள் கவனிக்கவில்லை.

வீட்டில் அவள் மனப்பாடம் செய்திருந்த மந்திரங்களைத்தான் பெரும்பாலும் பயிற்சியிலும் சொல்லிக் கொடுத்தார்கள். இப்போது கௌசல்யா போல தன்னாலும் ஸ்பஷ்டமாக சொல்ல முடிகிறது என்ற தன்னம்பிக்கை ஊர்மிளாவுக்கு வந்துவிட்டது. விட்டல் ருக்மணி தேவி கோவில் அர்ச்சகர் வேலைக்கு வழக்கமாக மந்திரம் சொல்பவர்களில்லாமல் மற்ற சாதிகளிலிருந்து 129 பேர் நேர்காணலில் பங்கேற்றார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களில் 16 பேர் பெண்கள். அதில் ஊர்மிளாவும் ஒருத்தி.
ருக்மணிதேவி சன்னதியில் பூசை செய்யும் வேலை கொடுக்கப்பட்டது.

ஊர்மிளா அங்கே சென்றாள். அம்பாளைப் பார்த்தாள். முதல்முறையாக ஒரு பெண், அர்ச்சனை செய்ய வந்திருக்கிறாளே என்று அம்பாளும் அவளை வாஞ்சையோடு பார்ப்பது போலவே இருந்தது. அபிஷேகம் செய்து, அலங்காரம் முடித்து அதன்பின்தான் அம்பாளுக்கு அர்ச்சனை செய்யவேண்டும். திரைச்சீலையை இழுத்துவிட்டாள். அம்பாள் கட்டியிருந்த சேலை மீது கை வைத்தாள்.

பெற்ற மகன் பெட்பேன் வைப்பதற்கே கூச்சப்பட்ட அம்மாவின் நினைவு ஊர்மிளாவுக்கு வந்தது. 900 ஆண்டுகளாக ஆண் அர்ச்சகர்ளாலேயே அபிஷேகம் செய்யப்பட்ட அம்பாளைப் பரிதாபத்தோடு பார்த்தாள். சிலையாக நின்ற ருக்மணிதேவி, தன் நெடுங்கால சங்கடத்திலிருந்து விடுதலையாகி புன்னகைப்பதுபோலவே இருந்தது ஊர்மிளாவுக்கு.

Monday, June 16, 2014

அவர்கள் மட்டும்தான் அர்ச்சனை செய்ய வேண்டுமா?



மாற்றம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, கடவுளுக்கும் தேவைப்படும் காலம் இது. ருக்மணிதேவி சமேதரான விட்டல் பெருமாள் 900 ஆண்டுகளாக ஒரே தரப்பினர் சொல்லும் மந்திரத்தைத்தான் கேட்டு வருகிறார். அதுவும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அந்த மந்திரத்தை அவருக்கு ஓத முடியும். இந்த நிலை இப்போது மாறுகிறது. அந்த இரு பிராமண குடும்பத்தவரிடம் மட்டுமே இருந்த உரிமை பரவலாகி, இனி பிராமணரல்லாதாரும் பெண்களும்கூட ருக்மணிதேவிக்கும் விட்டல் பெருமாளுக்கும் பூஜை செய்யலாம் என்பதுதான் புதிய மாற்றம்.
மராட்டிய மாநிலம் புனே அருகில் பந்தர்பூரில் உள்ளது பழமையும் பெருமையும் கொண்ட விட்டல்-ருக்மணி திருக்கோவில். ஆண்டுக்கு ஏறத்தாழ ஒரு கோடி பக்தர்கள் இங்கு வந்துபோவது வழக்கமாக இருக்கிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பகுதியில் வலிமையான வாக்குவங்கியைக் கொண்டுள்ள வர்கரி சமுதாயத்தினர். கோவிலில் அபிஷேகம், ஆராதனை உள்ளிட்டவற்றை செய்யும் உரிமை கொண்டவர்கள் இரண்டு பிராமணக் குடும்பத்தினர் மட்டும்தான். அனைவருக்கும் பொதுவான கடவுளுக்கு பூசை செய்யும் உரிமை அனைத்துத் தரப்பினருக்கும் வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், ஒரு தரப்பினரின் ஆதிக்கம் கூடாது எனவும் அதனை நீக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் 2014 ஜனவரியில் உத்தரவிட்டது. இதனையடுத்து, அர்ச்சகர் பணிக்கு 129 பேர் நேர்முகத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 16 பேர் பெண்கள்.
விட்டல்-ருக்மணி கோவில் அறக்கட்டளை என்பது மராட்டிய மாநில அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது. அது அண்மையில், “பிராமணரல்லாதவர்களையும் பெண்களையும் அர்ச்சகர்களாக அனுமதிக்க இருக்கிறோம்” என அறிவித்தது. (இது குறித்த செய்திகள் கடந்த மாதமே விடுதலை, முரசொலி போன்ற ஏடுகளில் விரிவாக வந்துள்ளன). தற்போது வர்கரி சமுதாயத்தினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். “அறக்கட்டளை என்பது தற்காலிக நிர்வாகம்தான் என்றும் அது கொள்கை முடிவுகளை எடுக்கமுடியாது” என்று அவர்கள் தெரிவித்திருப்பதுடன், அறக்கட்டளையை மாற்றி அமைக்க வேண்டும் என மராட்டிய மாநில அரசுக்கு கோரிக்கையும் வைத்துள்ளனர். அறக்கட்டளையினரோ, புதிய அர்ச்சகர்களை நியமிப்பது தொடர்பாக, மாநில அரசின் கருத்துக்காகக் காத்துள்ளனர்.
முடிவுகள் எடுப்பதில் சற்றுமுன்பின் தாமதமாகலாமே தவிர, உச்சநீதிமன்றம் உத்தரவை மீறமுடியாது என்றும், பெண் அர்ச்சர்கள் உள்பட பல சமுதாயத்தவர்களும் அர்ச்சராகும் உரிமையை யாரும் பறிக்க முடியாது என்கிறார்கள் மராட்டிய மாநில சட்ட வல்லுநர்கள். தமிழகத்திலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டம் தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு, அர்ச்சகர் பயிற்சியும் அளிக்கப்பட்டது. அப்பயிற்சியை நிறைவு செய்தவர்கள், இதுவரை அர்ச்சகராக முடியாதபடி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில், அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களுக்கு நியாயம் கிடப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் அ.தி.மு.க அரசு அலட்சியப்படுத்தி வருகிறது. அரசின் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றும் அர்ச்சகராக முடியாமல் சம்பந்தப்பட்டவர்கள் தவிக்கிறார்கள். விட்டல்-ருக்மணி திருக்கோவில் வழக்கின் உத்தரவை முன்னுதாரணம் காட்டியே, தமிழகத்தில் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களுக்குரிய உரிமையை தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசு நினைத்தால் நிலை நாட்ட முடியும். சிதம்பரம் கோவிலை மீண்டும் தீட்சிதர்கள் வசம் ஒப்படைக்கத் துணை நின்றவர்கள், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆர்வம் காட்டுவார்களா?
விட்டல்-ருக்மணி போன்ற ‘பெருங்கடவுளர்கள்’ உள்ள கோவில்களிலேயே பிராமணர்கள் மட்டுமின்றி பெண்கள் உள்பட அனைவரும் அர்ச்சகராகும் வாய்ப்பு மராட்டியத்தில் உருவாகியுள்ளது. தமிழகத்திலோ உள்ளூர் பூசாரிகள் இருந்த மாரியம்மன் கோவில் உள்பட சிறுதெய்வக் கோவில்களில் பிராமண அர்ச்சர்களை நியமிப்பதும், வடமொழி மந்திரங்களைச் சொல்வதும் ஃபேஷனாகிவிட்டது. அவர்கள் ஆட்டினால்தான் மணி ஆடும் என்றும், அவர்கள் சமஸ்கிருதத்தில் உச்சரித்தால்தான் மந்திரம் பலிக்கும் என்றும் எண்ணுகிற மனநிலைக்கு மக்கள் ஆளாகியிருக்கிறார்கள். தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக உச்சநீதிமன்றம் வழிகாட்டுமா? அது வழிகாட்டினாலும், மக்களின் இந்த மனநிலையை மாற்றாமல், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் முயற்சிக்கு ஆதரவு கிடைக்குமா? ‘கடவுள்’ வந்துதான் பதில் சொல்ல வேண்டும். 
பின் குறிப்பு- படத்தில் உள்ளது போன்ற வேலைகளைப் பெண்கள் செய்யமுடியும் என்கிறதுபோது, அர்ச்சனை செய்வதற்கு மட்டும் ஆண்டவன் அனுமதிக்கமாட்டாரா என்ன?


Thursday, June 13, 2013

சாதி இரண்டு ‘ஒழிய’ வேறில்லை

தேர்தல் அரசியலால் கட்டமைக்கப்பட்டிருக்கின்ற நமது ‘ஜனநாயக’ அமைப்பானது, அதன் உண்மை முகத்தை அவ்வப்போது காட்டிக்கொண்டே இருக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை அண்மையில் தர்மபுரியிலும் அதனைத் தொடர்ந்து உசிலம்பட்டியிலும் அது தனது முகத்தைக் காட்டியிருக்கிறது.
தர்மபுரி மாவட்டத்தில் வன்னியர் சாதியை சேர்ந்த பெண், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பையனைக் காதலித்து திருமணம் செய்துகொண்டதையும் அதன் விளைவால் ஏற்பட்ட வன்முறைகளையும் நாம் விளக்க வேண்டியதில்லை. தேர்தல் அரசியலை மையமாக வைத்து சாதித்தலைவர்கள் இதனை ஊதிப் பெரிதாக்கியதன் தொடர்ச்சியாக பெண்ணின் தந்தை தற்கொலை செய்துகொண்டார். தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசைகள் தீவைக்கப்பட்டன. இறுதியில், தன் காதல் கணவனிடமிருந்து விலகி, அம்மாவுடன் செல்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்து, அப்படியே சென்றுவிட்டார் மணப்பெண்.
      காதல் திருமணங்கள் சாதிக் கலப்பிற்கு வழிவகுப்பதை தங்கள் அடிமடியில் கைவைப்பதுபோல நினைக்கிறார்கள். சாதியத் தலைவர்கள். அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட-அல்லது தங்களைவிட தாழ்ந்ததாக நினைக்கும் சமுதாயத்தைச் சேர்ந்த பையனை உயர்சாதியினராக கருதிக்கொள்பவர்களின் பெண்கள் காதலித்தால் பிரளயமே ஏற்படும் அளவிற்கு பிரச்சினையைக் கிளப்புகிறார்கள். அதனால்தான் தர்மபுரி மாவட்டத்தில் ஓர் அதர்மம் அரங்கேறியது. அதன் தாக்கம் ஓய்வதற்கு முன்பாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள வடுகப்பட்டி கிராமத்தில் தீண்டாமையின் கோர முகம் வெளிப்பட்டிருக்கிறது.
 தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன், பள்ளியை முடித்துத் திரும்புகையில், சாதி இந்துக்களான  முக்குலத்தோர் வசிக்கும் தெருவழியாக வரும்போது காலில் செருப்பு அணிந்து வந்திருக்கிறான். அந்த ‘மாபெரும் குற்றத்’திற்காக, அவன் தலையில் அந்த செருப்பை சுமந்து  செல்ல வேண்டும  என்ற தண்டனையைவிதித்து, அதனை நிறைவேற்றியிருக்கிறார்கள் ‘உயர்’குலத்தோராகத் தங்களைக் கருதிக்கொள்வோர்.
      1990ஆம் ஆண்டில், ASIDE என்ற தமிழகத்தைச் சேர்ந்த ஆங்கிலப் பத்திரிகையில்  பணியாற்றிவந்த நண்பர் எல்.ஆர்.ஜெகதீசன் (தற்போது லண்டன் பி.பி.சியில் பணியாற்றுகிறார்) மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நிகழும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்து நேரில் சென்று களஆய்வு  செய்து, சிறந்த செய்திக்கட்டுரை ஒன்றை வெளியிட்டார்.  அதில் ஒரு தலித் பெரியவர், “அவுக (முக்குலத்தோர்) தெருவுல நடக்குறப்ப எங்க செருப்ப கையில எடுத்துக்கணும். செருப்பு போட்டுக்கிட்டு நடந்தா குத்தம்னு சொல்லி தண்டனை கொடுப்பாங்க” என்று தெரிவித்திருந்தார். அந்தக்  கட்டுரை வெளியாகி, ஏறத்தாழ கால்நூற்றாண்டுகாலம் கடந்தும் இதே நிலைமைதான். தற்போது பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் தைரியமாக முன்வந்து புகார் கொடுத்ததன் விளைவாகத்தான் இந்தத் தீண்டாமைக் கொடூரம் வெளியே தெரிய வந்திருக்கிறது.
      டீக்கடையில் இரட்டைக் குவளை முறை, கோவில் திருவிழாக்களில்  தனி வழிபாடு, ஊர்ப் பொது இடங்களில் சாதி இந்துக்களின் முன்னால் தாழ்த்தப்பட்ட மக்கள் உட்காரத் தடை, பேருந்துநிலையத்தில் நிற்க அனுமதி மறுப்பு, தெருக்களில் சைக்கிள் ஓட்டிச்செல்லவும் தடை என தீண்டாமையின் பல வடிவங்கள் இன்னும் ஆங்காங்கே நீடித்தபடி இருக்கின்றன. வடுகப்பட்டி கிராமத்தின் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரது படங்கள் உள்ளன. அம்பேத்கர் படம் இல்லை. அதை வைப்பதற்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் முயற்சிகள் மேற்கொண்டபோது, முக்குலத்தோர் (கள்ளர்) சமுதாயத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துத் தடுத்துள்ளார்கள். “ரேஷன் கடை க்யூவுல அவிங்க பக்கத்துல நாங்க நின்னாக்கூட பிரச்சினையைக் கிளப்பி, சாதிப் பஞ்சாயத்தைக் கூட்டுடிவாய்ங்க” என்று THE HINDU (2013 ஜூன் 12) நாளிதழிடன் தெரிவித்திருக்கிறார் வைரபாண்டி என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்து இளைஞர்.
      இத்தனைக்கும் இங்குள்ள முக்குலத்தோர் (கள்ளர்) சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவரும் விவசாயத்தைச் சார்ந்தும் செங்கல் சூளையிலும்தான் வேலை பார்க்கிறார்கள்.  பொருளாதார நிலைமையிலும் இரு சமுதாயத்தினருக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஆனாலும், ‘சாதியில் நாங்கள் உயர்ந்தவர்கள், நீங்கள் தாழ்ந்தவர்கள்’ என்ற உணர்வு அவர்களின் ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது. அதற்கு சாட்சியாக, அதே நாளிதழில் வெளியாகியுள்ள கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த 60 வயது  மாயாக்காள் என்ற பெண்மணியின் கருத்து அமைந்திருக்கிறது. “தாழ்ந்த சாதிக்காரவுக வூட்டுல நாங்க சாப்புடவும் மாட்டோம். டீத்தண்ணி குடிக்கவும் மாட்டோம்” என்றவரிடம், “ஏன்?” என்று நாளிதழின் நிருபர் கேட்டதற்கு, “பல நூறு வருசமா இதுதான் பரம்பரை வழக்கமா  இருக்குது” என்று சொல்லியிருக்கிறார் அந்தப் பெண்மணி. சாதிக் கட்டமைப்பின் இயல்பான  பலத்தை வெள்ளந்தியாக வெளிப்படுத்தும் வார்த்தைகள்தான் இவை. இந்த ‘வெள்ளந்தி’க்குள் எத்தகைய வன்மம் ஒளிந்திருக்கிறது என்பதையும் அதை தகர்த்தெறிய என்ன செய்யப்போகிறோம் என்பதும்தான் விடை காணப்படாமல் இருக்கும் கேள்விகள்.
      ஆள்பவர்களுக்குத்தான் இதற்கான பொறுப்பு அதிகம். அதிகாரமும் அவர்கள் கையில்தான் உள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட  வடுகப்பட்டி கிராமத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) வரை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் வரவில்லை என்று தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் வேதனையுடனும் கோபத்துடனும் தெரிவித்துள்ளனர்.  அதற்கான காரணம் ஒன்றும் புதிரானதல்ல. தமிழகத்தின் இன்றைய ஆளுங்கட்சியான அ.தி.மு.கவின் தலைமை கடந்த 1990கள் முதலே தன்னை முக்குலத்தோர் ஆதரவுக் கட்சியாக வெளிப்படுத்தி வந்திருக்கிறது. கொடியங்குளம் சம்பவம் உள்பட பல  நிகழ்வுகள் அதற்கு சாட்சியாக இருந்திருக்கின்றன. மாவட்ட ஆட்சித்தலைவரும் இதை அறிந்திருப்பாரே!
அதே நேரத்தில், அ.தி.மு.கவின் நிறுவனரான எம்.ஜி.ஆருக்கு இயல்பாக அமைந்த தாழ்த்தப்பபட்ட சமுதாயத்தின் வாக்கு வங்கியில் குறிப்பிட்ட சதவீதத்தை இன்னும் அ.தி.மு.க தன் வசம் கொண்டுள்ளது. கொடியங்குளம் தாக்குதலை அரசியல் களமாக்கி, கட்சி ஆரம்பித்து தேர்தலிலும் ஜெயித்த புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடந்த (2011) சட்டமன்றத்  தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில்தான் இடம்பெற்றிருந்தார் என்பதை அவ்வளவு சீக்கிரமாக மறந்துவிடமுடியாது.
தேர்தல் களத்தில் ஓட்டு பலம் மட்டுமே முக்கியம் என்ற கணக்கில்தான் எல்லாக் கட்சிகளும் செயல்படுகின்றன. அதனாலதான்  சாதியை பின்புலமாகக் கொண்ட பா.ம.க போன்ற கட்சிகளும், கொங்கு முன்னேற்றக்கழகம், மூவேந்தர் முன்னேற்றக்கழகம் போன்றவையும் பிற சாதி அமைப்புகளும் தேர்தல் நேரத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த முக்கியத்துவத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் வகையில், தேர்தல் இல்லாத நேரங்களில் சாதிக் கட்டமைப்பைப் பலப்படுத்தி விளைச்சல்  காண்கின்றன. தேர்தல் நேரத்தில் நன்றாக  அறுவடை செய்துகொள்ளலாம் என்ற கணக்குடன்.
விடுதலைசிறுத்தைகள் கட்சியைக் கூட்டணியில் கொண்டுள்ள தி.மு.க, தர்மபுரி வன்முறையின்போது தனது கட்சிநிர்வாகிகள் அடங்கிய உண்மை அறியும் குழு ஒன்றை அப்பகுதிக்கு அனுப்பி, வன்முறைக்கு யார் காரணம் என்ற அறிக்கையைத் தந்தது. ஆனால் பின்னர், வன்னியர் சங்கத்தின் முழுநிலா மாநாட்டின் போது மரக்காணம் பகுதியில் நடந்த கலவரத்தின்போது, உண்மைகளைக் கண்டறிய தி.மு.க முன்வரவில்லை. அதற்குள்ளாக என்ன மாற்றம்?
தி.மு.க என்பது அரசியல் கட்சி மட்டுமல்ல, அது சமுதாய சீர்திருத்த இயக்கம் என்று கட்சியின் தலைவர் கலைஞர் பல முறை வலியுறுத்திச் சொன்னாலும் மாவட்ட அளவிலும் அதற்குக் கீழ்நிலைகளிலும் பொறுப்புகளில் உள்ள தி.மு.க நிர்வாகிகளில் பெரும்பாலானவர்கள் சாதி வாக்குகளின் கண்ணோட்டத்திலேயே அரசியல் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை. சாதி இந்துக்களாக இருக்கும் இவர்கள், தங்களுக்கு அடுத்த நிலையிலும், தாழ்த்தப்பட்ட நிலையிலும் உள்ளதாகக் கருதும் சமுதாயத்தினரை அலட்சியப்படுத்தும் நோக்கிலேயே செயல்படுகின்றனர்.
முன்னாள் அமைச்சர்களான கே.என்.நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொங்கலூர் பழனிச்சாமி, சுரேஷ்ராஜன் உள்ளிட்ட பலரும் ‘உயர்’குலத்தோராக தங்களை நினைத்துக்கொண்டு மாவட்ட அரசியலை நடத்தி வருகின்றனர். இவர்களில் பெரும்பானலானவர்கள், தி.மு.க.வின்  எதிர்காலத் தலைமையான மு.க.ஸ்டாலினின் ஆதரவாளர்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது. உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் துணை  முதல்வராகவும் மு.க.ஸ்டாலின்  இருந்தபோது தமிழகத்தின் பல பகுதிகளிலும் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரங்களைத் திறந்துவைத்துப் பேசினார். அந்த நிகழ்வுகளிளெல்லாம் அவர்  மறக்காமல் குறிப்பிட்டது, “சதி என்ற சொல்லுக்குக் கால் முளைத்து சாதி என்ற சொல் உருவானது. தமிழ்ச் சமுதாயத்தில் சாதி என்ற சொல்லே இல்லை. மீண்டும் சாதியில்லாத சமுதாயமாக இது மாறவேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என்றார்.
மு.க.ஸ்டாலினுடைய விருப்பம் மட்டுமல்ல, திராவிடர் இயக்கத்தின் ஆணிவேரான- அடிப்படையானக் கொள்கையும் அதுதான். எனவே அவருடைய  சொந்த விருப்பத்தின் பேரிலாவது, சாதியில்லாத  அல்லது குறைந்தபட்சம் சாதி ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் இலட்சியப் பணியை அவர் தனது கட்டுப்பாட்டில் இன்னும் வைத்திருக்கும் இளைஞரணி மூலமாகத் தொடங்கவேண்டும். உடனடி வெற்றி கிடைத்துவிடாதுதான். எனினும், உறுதியான ஒரு கொள்கைப் பயணம் தொடங்கும்.
ஒவ்வொரு  சாதியும் தன்னை உயர்வாகவும் தனக்கு கீழே சில சாதிகள் இருக்கவேண்டும் எனவும் நினைக்கின்றன. இதுதான் ‘பார்ப்பன’ மனோபாவம். வருணாசிரம தர்மம். அது பார்ப்பனரல்லாதவர் மனதிலும் ஆழப்பதிந்திருக்கிறது. அந்த விஷச் செடியை வேரோடு பிடுங்கவேண்டும்.  எல்லா வகையிலும் மேல்சாதி, கீழ்சாதி என்ற இரண்டு நிலைகளும் ஒழிக்கப்படவேண்டும்.
 காதல் கலப்புத் திருமணங்கள், சமத்துவபுரங்கள், இடஒதுக்கீடு உள்ளிட்டவையெல்லாம் சாதி ஒழிப்புக்கான சர்வரோக நிவாரணி அல்ல. ஆனால், சாதி வெறி எனும் கொடிய நோயை ஓரளவு கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. எப்படி சாதிக் கட்டமைப்பை சாதிய அமைப்புகள் தங்கள் சமுதாயத்தினரின் ரத்த ஓட்டமாக வைத்துக் கொண்டிருக்கிறதோ அதுபோல சாதியற்ற சமுதாயம் என்ற இலட்சியத்தை திராவிட அரசியல் இயக்கமான  தி.மு.கவில் உள்ள அடுத்த தலைமுறையினரின் ரத்த ஓட்டமாக மாற்ற வேண்டும். இல்லையென்றால், நூற்றாண்டு கால பெருமைகொண்ட திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையும் அதற்காகப் பட்டபாடுகளும் கண் முன்னே சிதைந்து வீணாகிவிடுவது நிச்சயம்.

Thursday, February 2, 2012

ஆரியமாயை 2

2. அசகாய சூரரல்ல பார்ப்பனர்!

புராண, இதிகாசக் கால மன்னர்கள் ரிஷிகளிடமும் முனிவர்களிடமும் பயபக்தி, விசுவாசத்துடன் நடந்து கொண்டனர். தமது மணிமுடியையும் காணிக்கையாகத் தந்தனர். அவர்கள் எது கேட்டாலும் வழங்கினர்; அவர்கள் காலாலிட்ட வேலையைத் தலையால் செய்தனர் என்றெல்லாம் படிக்கிறோம்.

சரிதகால மன்னர்களிடம், சர்மாக்களும், ஐயர், ஐயங்கார்களும் திவான்களாகவும், மந்திரிகளாகவும் வாழ்ந்தனர். இதோ இன்றும், திருவிதாங்கூருக்கு யார் திவான்? சர். சி.பி.ஐயர்தானே! பரோடாவிலே சர்.விஜயராகவாச்சாரி என்றுதான் பட்டியல் காணமுடியும். நமது மாகாண சர்க்கார் சீப் செக்ரட்ரியாக இருந்து, இன்று ஆலோசகராக இருப்பவர், ஒரு எஸ்.வி.இராமமூர்த்தி ஐயர்தான்!

நமது மாகாண முதல் மந்திரியாக இருந்தவர், ஒரு இராஜகோபாலாச்சாரியார்தானே! நமது மாகாண சட்ட நிபுணராக, அட்வகேட் ஜெனரலாக இருப்பவர், ஒரு சர். அல்லாடி ஐயர்தானே! ஆபி டியூபா 1807இல் கூறியது, இன்றும் பிரத்யட்ச உண்மையாக, உள்ளங்கை நெல்லிக்கனியாக – அதுவல்ல பொருத்தமான வாசகம் – கைப்புண்ணாக இருக்கிறது என்று கூறுவேன். அதுதான் பொருத்தமான உபமானம்!

அக்காலத்து மன்னர்களை அண்டிப் பதவி பெற்ற பிறகு அநீதி, மோசம், அயோக்கியத்தனம், கொடுமை முதலியன புரிய ஆரியர் துணிவர் என்று, ஆபி டியூபா எழுதுகிறார். சிண்டு முடிந்து விடுவதிலே, கலகமூட்டுவதிலே அவர்கள் கைதேர்ந்தவர்கள் என்றும் கூறுகிறார். இல்லாமலா கலகத்தையே காரியமாகக் கொண்ட ஒரு தேவன் உண்டு என்ற கதையை வைத்திருக்க ஆரிய மனம் இடம் தந்தது? நாரதரைத் தொழும் பக்த சிகாமணிகளல்லவா அவர்கள்! எங்கே போகும் அந்தப் பலன்! நமது இனத்தின் தலையிலே வந்து விடிகிறது!

திறமைசாலிகள் என்பதற்காகப் பார்ப்பனரைப் பார்த்திபர்கள் பதவியில் அமர்த்தினர் என்பது மட்டுமல்ல; மற்ற மக்களிடம் உயர் ஜாதி என்று பெருமை பேசி அவர்களைக் கட்டுப்படுத்தும் ‘சக்தியை ஆரியர் பெற்றிருப்பதால், அவர்களை வேலையிலே இருக்கச் செய்தால் சாதாரண மக்களின் சள்ளை இராது என்பதற்காகவே வேந்தர்கள் வேதியரை வேண்டினர் என்ற உண்மையையும் ஆபி டியூபா எழுதுகிறார்.

இன்றும் ஒரு பள்ளியிலே ஆசிரியராக இருப்பினும், கோயிலிலே பூசை புரிவோராக இருப்பினும், மோட்ச லோகத் தரகராக இருப்பினும், சிற்றுண்டி விற்பவனாக இருப்பினும் அவர்களிடமும் நமது இனத்தவர் எவ்வளவு அடங்கி ஒடுங்கி உள்ளனர் என்பதைப் பாருங்கள்! பார்ப்பனரைப் பழிக்காதே! அது ‘மகா பாவம்என்று கூறும் மனப்பான்மை இன்றும் இருக்கிறது.

இவ்வளவுக்கும் அவர்கள் அசகாய சூரரல்ல, வீரம் அவர்களுக்குக் கிடையாது, கோழை உள்ளம் படைத்தவர்கள் அவர்கள் என்று டியூபா கூறுகிறார். படை என்றால் துடை நடுங்கும் கூட்டம், படை வீரரை அடக்கி ஒடுக்கி வைத்திருப்பது எதனால்? ஆரிய மாயையிலே, எம் இன மக்கள் வீழ்ந்து கிடப்பதனால் அன்றோ? ஆபி டியூபா போன்ற அறிஞர்கள் ஆரியரின் குணத்தினை எடுத்துக் கூறியிருப்பதை, நடுநிலை நின்று யோசிப்பவர் ஆரியரைப் போற்றி வாழ்வாரா? என்று கேட்கிறேன்.

“அன்னாய் வாழி வேண்டன்னை நம்மூர்ப்

பார்ப்பனக் குறுமகப் போலத் தாமுங்

குடுமித் தலைய மன்ற

நெடுமலை நாட னூர்ந்த மாவே! (ஐங்குறுநூறு)

“அம்மா, அவர், குதிரை மீதேறி வருகிறார் கம்பீரமாக!

யாரடி வருவது?

பெரிய மலைகள் சூழ்ந்த நாட்டுடைய தலைவர் பரிமீதேறி வருகிறார்.

சரி அதிலென்ன வியப்பு காண்கிறாய்?

அந்தக் குதிரை, தலையை அசைத்துக்கொண்டு வருகிறதே, அது வேடிக்கையாக இருக்குதம்மா!

அதிலென்னடி வேடிக்கை! மகாவேடிக்கை!

குதிரை தலையை அசைக்கும்போது கொத்தாக இருக்கும் குடுமியும் கூடவே கூத்தாடுகிறது. அதைப் பார்த்தால் சிரிப்புண்டாகிறது.

குதிரைக்குத் தலையிலே குடுமி ஆடினால் சிரிப்பு வரக் காரணம் என்னடி?

ஏனம்மா! நமது ஊரிலே உள்ள பார்ப்பனர் தலையின் உச்சுக்குடுமி அவர்கள் நடக்கும்போது கூத்தாடுகிறதே, அதைப்போல இல்லையா அந்தக் காட்சி? அதனால்தான் எனக்குச் சிரிப்பு உண்டாயிற்று!

போடி குறும்புக்காரி

வீதி வழியே செல்லுகிறான் குதிரை வீரன். குதிரை தலையசைக்க, அதன் குடுமி ஆடுகிறது. இதைக் கண்ணுற்ற தோழிக்குப் பார்ப்பனரின் குடுமி நினைவிற்கு வருகிறது, நகைக்கிறார்! கண்டதையும் கொண்ட கருத்தையும், தலைவிக்குக் கூறுகிறாள் பழந்தமிழகத்திலே. இக்கருத்து கொண்ட கவிதையே மேலே குறித்திருப்பது, ஐங்குறு நூறு எனும் ஏட்டிலுள்ளது, எடுத்துக் காட்டியதுமல்ல? ஈரோட்டுச் சரக்குமல்ல!

ஒரு காலம் இருந்தது, தமிழர்கள் ஆரியரை நகைப்புக்குரிய நடமாடும் உருவங்களாகக் கருதிய காலம். ஆரிய இனம் வேறு என்ற எண்ணம், மங்காதிருந்த காலம். ஆரியத்தை கேலிக்கூத்தாகக் கருதிய காலம்!

இன்றோ, ஆரியரைப் போன்ற புத்திக்கூர்மை, ஆசார அனுஷ்டானம், நேம நிஷ்டை, பூஜை புனஸ்காரம், நடையுடை பாவனை இருப்பதே தமிழருக்குச் சீலத்தையும் சிலாக்கியத்தையும் தரும் என்ற தவறான கருத்துத் தழைத்துக் கிடக்கிறது! காலம் முளைக்கச் செய்த இந்தக் கள்ளி படர்ந்திருப்பதாலேயே, நாச நச்சரவுகள் இங்கு நடமாடித் தமிழர் சமுதாயத்தைத் தீண்டித் தீர்த்து வருகின்றன.

ஆரியக் கலாச்சாரம் வேறு, திராவிடர் கலாச்சாரம் வேறு என்பது பற்றி, ஆராய்ச்சியாளர்கள் தெளிவாகவே கூறியுள்ளனர். ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களே, முதலில் ஆரிய நாகரிகம், மொழி, கலை ஆகியவற்றினை வானளாவப் புகழ்ந்தனர். மாக்ஸ் முல்லர் எனும் ஜெர்மானியர், இப்பணியிலே ஈடுபட்டபோது, இங்கு அக்ரகாரம் ஆனந்தக் கூத்தாடிற்று!

“வேதம், ஸ்மிருதி என்பவைகளுக்கு, மேனாட்டார் எவ்வளவு மதிப்பு தருகின்றனர் பாரீர்! எமது புகழ் எங்கும் பரிவிடக் கேளீர்!என்று பேசினர். பூரித்தனர். ஆபி டியூபா போல, ஆரிய இனத்தின் இயல்பினைக் கடிந்து கூறாமல், புகழ்ந்து பேசிய ஜெர்மன் ஆராய்ச்சியாளர் களின் புல்லறிவினைப் பொசுக்கப் புதிய ஆராய்ச்சியாளர் தோன்றலாயினர்.

இந்தியாவிலேயே முதன்முதல் நாகரிகத்தைப் புகுத்தியவர்கள் ஆரியர்தான் என்ற பொய்யுரை ஒழிய காலம் பிடித்தது. ஆரியத்தின் துணையின்றி, மிகப் பழங்காலந்தொட்டு இங்கே வளமான ஓர் நாகரிகம் ஓங்கியிருந்த உண்மையை, உலகு உணர நாட்களாயின. பண்டைத் தமிழரின் வாழ்வு பாழ்பட்டதும், வீரம் சரிந்ததும், கலை கறையானதும், நிலைகுலைந்ததும், ஆரியத்தின் கூட்டுறவால் நேரிட்ட அவதிதான் எனும் உண்மையை, உலகு முதலில் தெரிந்து கொள்ளவில்லை.

தொடரும்

Tuesday, January 31, 2012

ஆரிய மாயை பேரறிஞர் அண்ணா

1. ஆரியரின் இன இயல்பு என்ன?

ழகத்தையும் கழகத் தலைவர் அவர்களையும் தாக்கி ஒரு சிலர் பேசுவதும், எழுதுவதும், சில நாளேடுகளேகூட விஷத்தைக் கக்கி எழுதுவதும் சில நாட்களாகத் தொடருகின்ற காரணத்தால் – பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘திராவிட நாடு’ இதழில் எழுதி – காங்கிரஸ் ஆட்சியிலே 1950இல் தடை செய்யப்பட்டு – பிறகு அ.தி.மு.க. அரசில் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது, அந்தத் தடை நீக்கப்பட்ட ‘ஆரிய மாயை’ புத்தகத்தை மீண்டும் தொடர்ந்து வெளியிட வேண்டுமென்று ஒரு சில நண்பர்கள் தொலைபேசி வாயிலாகவும் கடிதம் வாயிலாகவும் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களின் எண்ணத்தை ஈடேற்றும் வகையில் மீண்டும் ‘ஆரிய மாயை’ தொடர்ந்து முரசொலியில் வெளிவருகிறது.

ஆசிரியர், முரசொலி

பேராசைப் பெருந்தகையே போற்றி!

பேச நா இரண்டுடையாய் போற்றி!

தந்திர மூர்த்தி போற்றி!

தாசர்தம் தலைவா போற்றி!

வஞ்சக வேந்தே போற்றி!

வன்கண நாதா போற்றி!

கொடுமைக் குணாளா போற்றி!

கோழையே போற்றி, போற்றி!

பயங்கொள்ளிப் பரமா போற்றி!

படுமோசம் புரிவாய் போற்றி!

சிண்டுமுடிந் திடுவோய் போற்றி!

சிரித்திடு நரியே போற்றி!

ஒட்டுவித்தை கற்றோய் போற்றி!

உயர் அநீதி உணர்வோய் போற்றி!

எம் இனம் கெடுத்தோய் போற்றி!

ஈடில்லாக் கேடே போற்றி!

இரை, இதோ, போற்றி! போற்றி!

ஏத்தினேன் போற்றி! போற்றி!

இந்தப் போற்றித் திருப்பா, புதுமையானதாக இருக்கிறதே! இதன் பொருள் விளங்கவில்லையே! பேராசையும் வஞ்சகமும் பிறவுமான கேடுபயக்கும் குணமுடையோரைப் போற்றுவது மடமையன்றோ? ஒழித்திட வேண்டியதைத் தொழுதிடுவது அறிவுடைமையாகுமா?

தேளைத் தேவனென்றும், பாம்பைப் பரமனென்றும், நரியை நாதனே என்றும், புலியைப் புண்ணியாவென்றும், பித்தருங்கூறாரே! நீயோ, நயவஞ்சகரை – நா இரண்டுடை யாரை நாவார வாழ்த்துகிறாயே போற்றி போற்றி என்று, இது என்ன பரதா? என்று கேட்பர், அன்பர். அடியேன் அறைவதல்ல ஐயன்மீர்!

நமது இனத்திலே உள்ளனரே, விரிந்த மனப்பான்மையும், பரந்த பாசமும், கனிந்த உள்ளமும், கருணை வெள்ளமுங்கொண்ட ‘சத்சூத்திரர்கள்’ அவர்கள் சதா காலமும், ஆரியரைப் போற்றி வாழுகிறார்களல்லவா? அவர்கள் போற்றித் தொழுதிடும் ‘பூசுரரின்’ திருக்கலியாண குணங்களை, அறிந்தோர் எடுத்துரைத்துள்ளனர்.

அடியேனுடைய வேலை, அவற்றைத் தொகுத்துப் பார்ப்பன பக்தர்கள் நடத்தும் ‘போற்றி போற்றி’யுடன் இணைத்து, அவசரத்திலே அகவலாக்கி உம்மிடம் தந்ததுதான்! நான் ஆரியரைப் போற்றவுமில்லை; போற்றிடக் கூறவுமில்லை! அதுபோலவே, நான் அவர்களை ஏசவுமில்லை; ஏசிடும்படி உங்களை ஏவிடவும் இல்லை. பிறர் கூறிய ஏசலை எடுத்துக் கூறுகிறேன்.

அக்கிரகாரத்தை அனுதினமும் அர்ச்சிக்கும் அன்பர்கள், “ஏண்டா பரதா! எக்காரணம் பற்றி, எந்த ஆதாரத்தின்மீது நீ பூதேவரை நயவஞ்சகரென்று நாத்தடுமாறாது கூறுகிறாய், படமோசக்காரர் என்று பதட்டம் பேசுகிறாய், பலப் பல கூறி ஏசுகிறாய், பாபமூட்டையைச் சுமக்கிறாய், பாவி. நீ ரெளரவாதி நரகத்தில் உழலுவாய் போ” என்று சபிப்பர்.

அவர்களுக்குக் கூறுகிறேன். தூற்றலல்ல, நான் தொகுத்திட்ட இப்பா. பன்னெடு நாட்களுக்கு முன்பு, படம் பிடித்தார் ஓர் பரங்கி. அதனை நான் இன்று வெளியிடுகிறேன். சரக்கு நம்முடையதல்ல! இல்லாததை, எடுத்துக்கட்டிக் கூறுவதுமல்ல, மீண்டும் ஓர் முறை இப்போதே போற்றிப் பாசுரத்தைப் படியுங்கள். படித்தீர்களா? சரி, இதோ பாருங்கள். சில ஆங்கிலச் சொற்கள்!

Avaric, Ambition, Cunning, Wily, Doubletongued, Servile, Insinuating, Injustice, Fraud, dishonest, Oppression, Intrigue.

இனி, இந்த ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழில் என்ன பொருள் என்பதை அகராதியின் உதவி கொண்டு பாருங்கள். பிறகு நான் தீட்டிய போற்றிப் பாசுரம் சரியா, மிகைப்படுத்தினேனா, தவறா? என்பது பற்றி யோசியுங்கள்.

தோழர்களே, இத்தகைய பதங்களால் ஆரியரை அர்ச்சித்திருக்கிறார், ஆபி டியூபா என்னும் அறிஞர். இன்றல்ல நேற்றல்ல; டாக்டர் நாயரின் முரசு கேட்டல்ல; வகுப்புவாத நச்சரவு கடித்ததாலல்ல; கண்ணாரக் கண்டதைக் கருத்தார உணர்ந்து, நாவார உரைத்தார் 1807ல்.

“Hindu Manners Customs and Ceremonies” என்ற நூல் Abbe J. A. Dubois என்பவரால் 1807ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதிலே, பார்ப்பனரை அவர் இவ்வண்ணம் அர்ச்சித்திருக்கிறார்! ஆரிய இன இயல்பை, மிகத் தெளிவாகத் தீட்டியிருக் கிறார். இவ்வித இயல்புடைய இனத்தைத்தான், இன்றும் தமிழரிற் பலர் தொழுது வருகின்றனர்; உயர் ஜாதி என்று உரைக்கின்றனர்; ‘சாமி’ என்று சாற்றுகின்றனர். என்னே அவர் தம் நிலை! ஆபி டியூபா, பிரெஞ்சுப் பாதிரி. இங்கு 136 ஆண்டுகளுக்கு முன்னர், தாம் கண்டறிந்த உண்மையை எழுதி வைத்தார். அதிலே, பார்ப்பனரின் பண்பு பற்றி அவர் வருணிக்கையிலே, அவர் பிரயோகித்துள்ள பதங்களையே நான் போற்றிப் பாசுரமாக்கிக் காட்டினேன்.

அவர் ‘தீட்டியுள்ளது தவறானது; காமாலைக் கருத்துடையவர் அவர்’ என்றும் யாரும் கூறிவிடவும் முடியாது. ஈடில்லாத ‘இந்து’ பத்திரிகை, ஆபி டியூபாவின் நூலுக்கு மதிப்புரை தந்திருக்கிறது. அதுமட்டுமா? அன்று அப்பாதிரியார் கூறிய அதே நிலையிலேயே இங்கு மக்கள் இன்றும் உள்ளனர் என்றும் ‘இந்து’ எழுதிற்று.

ஆரியரில் யாரோ ஒரு அயோக்கியனை, என்றோ ஒருநாள் அந்த வெளிநாட்டுக்காரன் கண்டுவிட்டுப் பொதுப்படையாகப் புகல்வது மடமையன்றோ? எந்நாட்டிலும், எந்த இனத்திலும் அயோக்கியர்கள் சிலர் இருப்பர்; அதற்காக அந்த இனமே அத்தகைய இயல்புடையது என்று இயம்பலாமா? இது முறையா? அழகா? என்று கேட்பர் சிலர்!

முறையாகாது என்று நான் மும்முறை கூறுகிறேன். அழகல்ல என்று ஆறு தடவை வேண்டுமாயினும் சொல்கிறேன். ஓர் ஆளின் கெட்ட குணத்தை ஆதாரமாகக் கொண்டு அந்த ஆள் எந்த இனத்தவரோ, அந்த இனத்தையே அக்குற்றச்சாட்டுக்கு உள்ளாக்குவது மடமைதான்.

ஆனால், ஆபி டியூபா முப்பது ஆண்டுகள் இங்கு உலவினார்; நாடு முழுவதும் சுற்றினார்; மக்களின் அன்றாட வாழ்க்கையினைக் கூர்ந்து கவனித்தார். ஆரிய இனத்தின் இயல்பினை, உள்ளது உள்ளவாறு கண்ட பிறகே ஏட்டில் எழுதினார்.

சரி, ஆபி டியூபா, பிரெஞ்சுப்பாதிரி; அவர் பிரான்சு மொழியிலே எழுதியிருப்பார். அதை ஆங்கிலமாக்கியவர் கயிறு திரித்திருக்கக்கூடாதோ? என்று சாகச சித்தர்கள் கேட்பர்.

ஆபி டியூபாவின் பிரெஞ்சு நூலை, ஆங்கிலமாக்கியர் எச்.கே.பீன்சாம்ப் என்னும் ஆங்கிலர்தாம். ஆனால் அதனை மேற்பார்வை செய்தவரோ, சி.வி.முனுசாமி ஐயர் எனும் பூசுரரே! தவறு இருப்பின், அவரா சும்மா இருப்பார்?

ஆகவே, ஆபி டியூபா, ஆரியரை நன்கு அறிந்தே இங்ஙனம் அர்ச்சித்திருக்கிறார். ஆரிய மாயையில் அவர் சிக்கிச் சொக்காத காரணத்தால், உள்ளது உள்ளபடி தீட்டிட முடிந்தது. அர்ச்சனை கிடக்கட்டும் அன்பர்களே, அவர் தீட்டியுள்ள வாசகக் கருத்துகள் சிலவற்றினைக் கேளீர்!

“பேராசை என்பது அந்தப் பார்ப்பன இனத்தவர் ஒவ்வொருவருக்கும் இயல்பு; எனவே அவர்கள் வேதாந்திகள் போன்ற விரக்தி நிலையில் வாழ முடிவதில்லை!”

இது ஆபி டியூபாவின் வாசகம். இன்றும் இதிலே முழு உண்மை இருத்தலை உலகு அறியும். மாயாவேதம் பேசும் சங்கராச்சாரிகள், பொற்பல்லக்கில் சவாரி செய்வது இன்றும்தானே நடக்கிறது! வேதாந்தமும் விரக்தியும், விருந்தும் வைபவமுமாகக் காட்சியளிப்பதைக் காணவில்லையா? இதைத்தான் ஆபி டியூபா அன்றே கூறினார்.

தந்திரம், நயவஞ்சகம், இரட்டை நாக்கு, பல்லிளித்து நிற்பது முதலியன, அவர்களிடம் இயற்கையாகவே இருக்கின்றன. எப்படியாவது அரசர்களை அண்டிப் பதவி பெறுவதே அவர்கள் நோக்கம் என்று ஆபி எழுதுகிறார். இதற்குச் சரிதம் அனேக சான்று தருகிறது.

-தொடரும்

Thursday, December 31, 2009

உழைப்பு உயர்வு தருமா?

புது வருசம்னா நல்ல விசயம் சொல்லணும்ல. நண்பர் ஒருவர் தன் புது டயரியில், ‘உழைப்பே உயர்வு தரும்னு எழுதி வச்சிருந்தார். அவர்கிட்டே பேசிட்டு வரும்போது, நடுரோட்டில் பாதாள சாக்கடைக்குள்ளே ஒரு துப்புரவுத் தொழிலாளர் இறங்கிக்கிட்டிருந்தார். அவர் உழைக்கிற உழைப்பை நாம உழைக்கிறோமா? ஆனா, நாம உயர்ந்த அளவுக்காவது அவர் உயர்ந்திருக்கிறாரா? அவர் வேலை மாதிரியே வாழ்க்கையும் பாதாளத்தில்தானே இருக்குது. அப்புறம் எப்படி உழைப்பு உயர்வு தரும்?
விவசாயி, நெசவாளி, தொழிலாளி எல்லோரும்தான் கடுமையா உழைக்கிறாங்க. ஆனா முதலாளி, அரசியல்வாதி, சினிமா நடிகர், புரோக்கர் பயலுக இவங்கதானே உயருராங்க. ஒரு விவசாயி 2 ஏக்கர் நிலத்துல வருசம் முழுக்க பாடுபட்டாலும் மிஞ்சுறது சில ஆயிரம்தான். அம்பானி கம்பெனியோ நிமிசத்துக்கு பல லட்சங்களை இலாபமா அள்ளிடுது. அம்பானிக்கு அள்ளித்தர்ற உழைப்பு, வெவசாயிக்கு கிள்ளித்தர யோசிக்குதே.. என்ன சமாச்சாரம்?
பொட்ட கோழி கூவி பொழுது விடியாதுன்னு ஊருப்பக்கம் சொல்லுவாங்க. வெறுமனே உழைச்சி உசந்திட முடியாது. எதுக்காக உழைக்கிறோம், எதை நோக்கி உழைக்கிறோம், எதை அடைவதற்கு உழைக்கிறோம், எந்த இடத்தில் உழைக்கிறோம், யாருக்காக உழைக்கிறோம் இப்படி பல உழைப்புகள் பற்றியும் யோசிச்சி உழைச்சாதான் முன்னேற முடியும். வாழ்க்கையில் ஜெயிச்சவங்க பலரும் உழைப்பாளிகள்தான். அவங்க தங்களோட சிந்தனையை செயல்படுத்த உழைச்சாங்க...ஜெயிச்சாங்க. அதனால, செக்குமாடு மாதிரி உழைக்காம சிந்திச்சி உழைப்போம். அப்பதான் பந்தயக் குதிரை மாதிரி இலக்கை அடைய முடியும். அதனால புதுவருசத்துல என்னோட சிந்தனை என்னன்னா....
(வெறும்) உழைப்பு உயர்வு தராது. சிந்திச்சி-திட்டம்போட்டு உழைங்க. ஜெயிங்க. தமிழ்- ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.


அக்கப்போரு மொக்கராசு
ஊர் ஊருக்கு புத்தாண்டு நள்ளிரவுக் கொண்டாட்டம் அமர்க்கப்படுது. டி.வி. சேனல்களும் கலக்குது. ஒவ்வொரு வருசமும் புதுப்புது அயிட்டங்கள் அறிமுகமானாலும் வருசம் பொறக்குற அந்த நொடியில போடுற பாட்டு.. சகலகலாவல்லவன் படத்தில் இடம்புடிச்ச இளமை இதோ.. இதோ.. பாட்டுதான். அந்தப்பாட்டின் எடுத்த எடுப்புல விஷ் யூ ஹேப்பி நியூ இயர்னு சொல்லுறதைத் தவிர , புது வருசம் பற்றிய வேற எந்த வரியும் கிடையாது. ஆனாலும் படம்வெளியாகி 28 வருசமாகியும் இன்னமும் இளமையாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கிற இளையராஜாவின் இசையும் எஸ்.பி.பியின் குரலும்தான் தலைமுறைகள் கடந்தும் அந்தப் பாட்டை பாட வைக்குது. சரிதானுங்களே...

Sunday, September 13, 2009

அண்ணா நூற்றாண்டு- கொண்டாட்டத்திற்கா? கொள்கைப் பயணத்திற்கா?



சுயமரியாதை-மாநில சுயாட்சி- மனித உரிமை- தாய்மொழிக்கான தனித்துவம் இவற்றை அடிப்படையாகக் கொண்டது அண்ணாவின் அரசியல் தளம். அவருடைய நூற்றாண்டு 2008 செப்டம்பர் 15ல் தொடங்கி 2009 செப்டம்பர் 15ல் நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் அண்ணா உருவாக்கிய அரசியல் சூத்திரத்தின் அடிப்படையில்தான் திராவிட கட்சிகள் அரசியல் செல்வாக்கு பெற்றன.


அண்ணா உருவாக்கிய தி.மு.க, அண்ணா பெயரிலான அ.தி.மு.க, அண்ணா கனவு கண்ட மறுமலர்ச்சியை உருவாக்கப்போவதாகச் சொல்லி உருவான ம.தி.மு.க இவை திராவிடக் கட்சிகள் என அழைக்கப்படுகின்றன. தேசிய முற்போக்கு திராவிட கழகம் உள்பட, பெயரில் திராவிடத்தை தாங்கியுள்ள கட்சிகளும் உண்டு. இவர்களில் அண்ணா நூற்றாண்டை பயனுள்ளதாகக் கொண்டாடிய கட்சி எது?


தே.மு.தி.கவின் நிகழ்ச்சிகளுக்கான விளம்பரங்களில் அண்ணா படம் இடம்பெறவேண்டும் என கட்சி மேலிடம் உத்தரவிட்டது. அதன்படி தொண்டர்கள் செயல்பட்டனர். இதுதான் அக்கட்சியின் அண்ணா நூற்றாண்டு விழா. ம.தி.மு.க சார்பில் அண்ணா நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் அதனால் பரவலான தாக்கத்தையும் கவனிப்பையும் ஏற்படுத்தும் அரசியல் சூழல் இப்போது இல்லை. அண்ணா பெயரிலான அ.தி.மு.க குடிகொண்டிருப்பது கொடநாட்டில். அதனால் அண்ணா சிலைக்கு மாலை போடுவது, பொதுக்கூட்டம் நடத்துவது என்பதுடன் அ.தி.மு.கவின் கடமை முடிந்துவிட்டது. அண்ணாவால் உருவாக்கப்பட்டு, அவரிடம் அரசியல் பயின்ற கலைஞரால் வழிநடத்தப்படும் தி.மு.கவுக்குத்தான் விழா நடத்துவதற்கு அதிக உரிமையும் பொறுப்பும் இருக்கிறது. அதுவும் தி.மு.க தற்போது ஆட்சியில் இருப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்புகள் அதிகம்.


தமிழக அரசின் சார்பில் அண்ணா நூற்றாண்டு விழா மலர் வெளியீடு, அண்ணாவின் உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய் நாணயம் வெளியீடு என சிறப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் அண்ணா குறித்த கருத்தரங்கம், படக்காட்சி, நூல் வெளியீடு போன்ற நிகழ்ச்சிகள் கடந்த ஓராண்டில் நடந்துள்ளன. ஆய்வரங்கங்களும் நடத்தப்பட்டுள்ளன. அரசு சார்ந்த துறைகளின் சார்பாகவும் அண்ணா நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் பல நடைபெற்றுள்ளன.


தி.மு.க என்ற அரசியல் இயக்கம் 2008 செப்டம்பர் 21ஆம் நாள் திருச்சியில் முப்பெரும்விழா நடத்தியது. இதுதான் அக்கட்சியின் சார்பிலான அண்ணா நூற்றாண்டு விழா தொடக்கம். விழாவில் பேசிய கூட்டணிக் கட்சித் தலைவரான தங்கபாலு, ஆட்சியில் பங்கு பற்றி ஏதேதோ சொல்லித் தொலைக்க, கலைஞரின் பேச்சில் தங்கபாலுவுக்கு பதில் சொல்லவே நேரம் சரியாக இருந்தது. அதன்பின், நவம்பரில் கோவையிலும் 2009 ஜனவரியில் திருநெல்வேலியிலும், மார்ச்சில் சேலத்திலும், மே மாதத்தில் தஞ்சையிலும், ஜூன் மாதத்தில் மதுரையிலும், ஜூலையில் காஞ்சியிலும், செப்டம்பரில் சென்னையிலும் அண்ணா நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடத்த தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. நடந்தனவா?


காங்கிரசுடன் கூட்டணியில் இருப்பதால், ஈழத்தமிழர் விவகாரத்தில் தடுப்பாட்டம் ஆடவேண்டிய சூழலுக்கு தி.மு.க தள்ளப்பட்டதாலும், அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல் ஆகியவற்றில் காங்கிரசையும் சுமந்துகொண்டு களம் காண வேண்டியிருந்ததாலும் திட்டமிட்டபடி அண்ணா நூற்றாண்டு நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. ஆக, அண்ணாவை தி.மு.க முழுமையாகக் கொண்டாடமுடியாதபடி தடுத்துவிட்ட பங்கு ஒருவிதத்தில் காங்கிரசையே சாரும்.


தி.மு.க கட்சித்தலைமையின் விழாக்கள் பல சூழல்களால் நடைபெறமுடியாமல் போனாலும் தி.மு.கவில் உள்ள பல்வேறு அணிகளின் சார்பிலான அண்ணா நூற்றாண்டு விழாக்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடைபெற்றுள்ளன. அதில் முக்கியமானது, இளைஞரணியின் சார்பில் நடத்தப்பட்ட அண்ணா நூற்றாண்டு தொடக்கம் மற்றும் நிறைவு விழாவையொட்டி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சு-கட்டுரை-கவிதை போட்டிகள்.


பெரியார், காமராஜர், அண்ணா இவர்களெல்லாம் யார் என்று கேட்கும் ஒரு தலைமுறை உருவாகியுள்ள நிலையில், இன்றைய மாணவர்களின் மனதில் அண்ணாவைப் பதிய வைக்கும் ஒரு முயற்சியாக மாவட்டந்தோறும் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் மூலமாக ஒரு புதிய தலைமுறைக்கு அண்ணாவை அறிமுகம் செய்துவைத்த பணியை செய்திருக்கிறது தி.மு.க இளைஞரணி. இது ஒரு தொடக்கம். அதுபோல, திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், அண்ணா பற்றாளர்களால் நடத்தப்படும் தனி அமைப்புகள் சார்பிலும் பல நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டதும் வரவேற்புக்குரிய பணி.


இந்நிலையில், அண்ணாவை அறிந்துகொள்ளாத தலைமுறை மட்டுமின்றி, அண்ணாவின் அரசியல் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளாமல் முற்றாக விமர்சிக்கும் தலைமுறையையும் காண முடிகிறது. இவர்களுக்கு அண்ணாவை சரியாகப் புரியவைக்கக்கூடிய முயற்சிகளை அண்ணா நூற்றாண்டில் திராவிட அரசியல் கட்சிகள் மேற்கொண்டனவா என்ற கேள்வி எழுகிறது.


கால மாற்றங்களினால் கருத்து மாற்றமும் ஏற்படுவது வழக்கம். இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து இருமொழிக் கொள்கையை அண்ணா கொண்டு வந்தார். படித்து முன்னேறியுள்ள இன்றைய தலைமுறையினரிடம், இந்திக்கு இடமில்லாத காரணத்தால் தமிழகம் இந்தியாவிலேயே தனித்தீவாகிவிட்டது என்ற கருத்து பரப்பப்பட்டுள்ளது. இது சரியானதுதானா?


கம்பராமாயணம், பெரியபுராணம் உள்ளிட்ட இலக்கியங்களின் கருத்துகளுக்கு எதிராக பெரியார்- அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் மேற்கொண்ட போராட்டங்களால் இன்றைய தலைமுறைக்கு பக்தி இலக்கியத்தின் சிறப்புகளும் அவற்றின் மொழி ஆளுமையும் தெரியாமல் போய்விட்டன என்ற குற்றச்சாட்டு சரியானதுதானா?


காவிரி-பாலாறு- முல்லைப்பெரியாறு என அண்டை மாநிலங்களுடன் தண்ணீர் சிக்கல் நீடிக்கும் நிலையில் அண்ணா வலியுறுத்திய மாநில சுயாட்சிக் கொள்கையில் என்ன முன்னேற்றத்தை இன்று நாம் கண்டுள்ளோம்?


இத்தகையக் கேள்விகளை ஒட்டிய விவாதங்களைத் தொடங்குவதே அண்ணா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு சிறப்பையும் பயனையும் உருவாக்கும். திராவிட அரசியல் கட்சிகளிடம் உள்ள தொலைக்காட்சி ஊடகங்களில் இத்தகைய விவாதங்கள் இடம்பெறும் என நாம் நம்பி ஏமாறுவதைவிட, இணையதளங்கள், வலைப்பதிவுகள், பொதுநிகழ்ச்சிகள் மூலமாக இந்த விவாதங்களைத் தொடங்கலாம்.. தொடரலாம். அதுவே, அண்ணாவின் கொள்கைகளையொட்டிய பயணமாக இருக்கும்.


எனது வலைப்பதிவில் அதற்கான கடை விரிக்கப்பட்டுள்ளது. கொள்வோர் கொள்ளலாம்.


- - -


அக்கப்போரு மொக்கராசு


பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக தி.மு.க அரசு கொண்டாடுகிறது. அண்ணா நூற்றாண்டு விழாவை தமிழக காங்கிரசார் கொண்டாடுவதாகத் தெரியவில்லையே... அந்தளவுக்கு பரந்த மனப்பான்மையை காங்கிரசாரிடம் எதிர்பார்க்க முடியுமா? கொண்டாடினாலும் எந்தக் கோஷ்டி கொண்டாடுவது என சட்டையையும் வேட்டியையும் கிழித்துக் கொள்வார்களே!


தமிழக இடதுசாரி இயக்கங்கள் சார்பில் திராவிட இயக்கத்துடன் தொடர்புடைய கலைவாணர் என்.எஸ்.கே, நடிகவேள் எம்.ஆர்.ராதா ஆகியோரின் நூற்றாண்டு விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. அண்ணா நூற்றாண்டு விழாவை மட்டும் கண்டு கொள்ளவேயில்லையே காம்ரேடுகள்! அண்ணா என்றால் தீண்டாமையோ!