2. அசகாய சூரரல்ல பார்ப்பனர்!
புராண, இதிகாசக் கால மன்னர்கள் ரிஷிகளிடமும் முனிவர்களிடமும் பயபக்தி, விசுவாசத்துடன் நடந்து கொண்டனர். தமது மணிமுடியையும் காணிக்கையாகத் தந்தனர். அவர்கள் எது கேட்டாலும் வழங்கினர்; அவர்கள் காலாலிட்ட வேலையைத் தலையால் செய்தனர் என்றெல்லாம் படிக்கிறோம்.
சரிதகால மன்னர்களிடம், சர்மாக்களும், ஐயர், ஐயங்கார்களும் திவான்களாகவும், மந்திரிகளாகவும் வாழ்ந்தனர். இதோ இன்றும், திருவிதாங்கூருக்கு யார் திவான்? சர். சி.பி.ஐயர்தானே! பரோடாவிலே சர்.விஜயராகவாச்சாரி என்றுதான் பட்டியல் காணமுடியும். நமது மாகாண சர்க்கார் சீப் செக்ரட்ரியாக இருந்து, இன்று ஆலோசகராக இருப்பவர், ஒரு எஸ்.வி.இராமமூர்த்தி ஐயர்தான்!
நமது மாகாண முதல் மந்திரியாக இருந்தவர், ஒரு இராஜகோபாலாச்சாரியார்தானே! நமது மாகாண சட்ட நிபுணராக, அட்வகேட் ஜெனரலாக இருப்பவர், ஒரு சர். அல்லாடி ஐயர்தானே! ஆபி டியூபா 1807இல் கூறியது, இன்றும் பிரத்யட்ச உண்மையாக, உள்ளங்கை நெல்லிக்கனியாக – அதுவல்ல பொருத்தமான வாசகம் – கைப்புண்ணாக இருக்கிறது என்று கூறுவேன். அதுதான் பொருத்தமான உபமானம்!
அக்காலத்து மன்னர்களை அண்டிப் பதவி பெற்ற பிறகு அநீதி, மோசம், அயோக்கியத்தனம், கொடுமை முதலியன புரிய ஆரியர் துணிவர் என்று, ஆபி டியூபா எழுதுகிறார். சிண்டு முடிந்து விடுவதிலே, கலகமூட்டுவதிலே அவர்கள் கைதேர்ந்தவர்கள் என்றும் கூறுகிறார். இல்லாமலா கலகத்தையே காரியமாகக் கொண்ட ஒரு தேவன் உண்டு என்ற கதையை வைத்திருக்க ஆரிய மனம் இடம் தந்தது? நாரதரைத் தொழும் பக்த சிகாமணிகளல்லவா அவர்கள்! எங்கே போகும் அந்தப் பலன்! நமது இனத்தின் தலையிலே வந்து விடிகிறது!
திறமைசாலிகள் என்பதற்காகப் பார்ப்பனரைப் பார்த்திபர்கள் பதவியில் அமர்த்தினர் என்பது மட்டுமல்ல; மற்ற மக்களிடம் உயர் ஜாதி என்று பெருமை பேசி அவர்களைக் கட்டுப்படுத்தும் ‘சக்தி’யை ஆரியர் பெற்றிருப்பதால், அவர்களை வேலையிலே இருக்கச் செய்தால் சாதாரண மக்களின் சள்ளை இராது என்பதற்காகவே வேந்தர்கள் வேதியரை வேண்டினர் என்ற உண்மையையும் ஆபி டியூபா எழுதுகிறார்.
இன்றும் ஒரு பள்ளியிலே ஆசிரியராக இருப்பினும், கோயிலிலே பூசை புரிவோராக இருப்பினும், மோட்ச லோகத் தரகராக இருப்பினும், சிற்றுண்டி விற்பவனாக இருப்பினும் அவர்களிடமும் நமது இனத்தவர் எவ்வளவு அடங்கி ஒடுங்கி உள்ளனர் என்பதைப் பாருங்கள்! பார்ப்பனரைப் பழிக்காதே! அது ‘மகா பாவம்’ என்று கூறும் மனப்பான்மை இன்றும் இருக்கிறது.
இவ்வளவுக்கும் அவர்கள் அசகாய சூரரல்ல, வீரம் அவர்களுக்குக் கிடையாது, கோழை உள்ளம் படைத்தவர்கள் அவர்கள் என்று டியூபா கூறுகிறார். படை என்றால் துடை நடுங்கும் கூட்டம், படை வீரரை அடக்கி ஒடுக்கி வைத்திருப்பது எதனால்? ஆரிய மாயையிலே, எம் இன மக்கள் வீழ்ந்து கிடப்பதனால் அன்றோ? ஆபி டியூபா போன்ற அறிஞர்கள் ஆரியரின் குணத்தினை எடுத்துக் கூறியிருப்பதை, நடுநிலை நின்று யோசிப்பவர் ஆரியரைப் போற்றி வாழ்வாரா? என்று கேட்கிறேன்.
“அன்னாய் வாழி வேண்டன்னை நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமுங்
குடுமித் தலைய மன்ற
நெடுமலை நாட னூர்ந்த மாவே! (ஐங்குறுநூறு)
“அம்மா, அவர், குதிரை மீதேறி வருகிறார் கம்பீரமாக!”
“யாரடி வருவது?”
“பெரிய மலைகள் சூழ்ந்த நாட்டுடைய தலைவர் பரிமீதேறி வருகிறார்.”
“சரி அதிலென்ன வியப்பு காண்கிறாய்?”
“அந்தக் குதிரை, தலையை அசைத்துக்கொண்டு வருகிறதே, அது வேடிக்கையாக இருக்குதம்மா!”
“அதிலென்னடி வேடிக்கை! மகாவேடிக்கை!”
“குதிரை தலையை அசைக்கும்போது கொத்தாக இருக்கும் குடுமியும் கூடவே கூத்தாடுகிறது. அதைப் பார்த்தால் சிரிப்புண்டாகிறது.”
“குதிரைக்குத் தலையிலே குடுமி ஆடினால் சிரிப்பு வரக் காரணம் என்னடி?”
“ஏனம்மா! நமது ஊரிலே உள்ள பார்ப்பனர் தலையின் உச்சுக்குடுமி அவர்கள் நடக்கும்போது கூத்தாடுகிறதே, அதைப்போல இல்லையா அந்தக் காட்சி? அதனால்தான் எனக்குச் சிரிப்பு உண்டாயிற்று!”
“போடி குறும்புக்காரி”
வீதி வழியே செல்லுகிறான் குதிரை வீரன். குதிரை தலையசைக்க, அதன் குடுமி ஆடுகிறது. இதைக் கண்ணுற்ற தோழிக்குப் பார்ப்பனரின் குடுமி நினைவிற்கு வருகிறது, நகைக்கிறார்! கண்டதையும் கொண்ட கருத்தையும், தலைவிக்குக் கூறுகிறாள் பழந்தமிழகத்திலே. இக்கருத்து கொண்ட கவிதையே மேலே குறித்திருப்பது, ஐங்குறு நூறு எனும் ஏட்டிலுள்ளது, எடுத்துக் காட்டியதுமல்ல? ஈரோட்டுச் சரக்குமல்ல!
ஒரு காலம் இருந்தது, தமிழர்கள் ஆரியரை நகைப்புக்குரிய நடமாடும் உருவங்களாகக் கருதிய காலம். ஆரிய இனம் வேறு என்ற எண்ணம், மங்காதிருந்த காலம். ஆரியத்தை கேலிக்கூத்தாகக் கருதிய காலம்!
இன்றோ, ஆரியரைப் போன்ற புத்திக்கூர்மை, ஆசார அனுஷ்டானம், நேம நிஷ்டை, பூஜை புனஸ்காரம், நடையுடை பாவனை இருப்பதே தமிழருக்குச் சீலத்தையும் சிலாக்கியத்தையும் தரும் என்ற தவறான கருத்துத் தழைத்துக் கிடக்கிறது! காலம் முளைக்கச் செய்த இந்தக் கள்ளி படர்ந்திருப்பதாலேயே, நாச நச்சரவுகள் இங்கு நடமாடித் தமிழர் சமுதாயத்தைத் தீண்டித் தீர்த்து வருகின்றன.
ஆரியக் கலாச்சாரம் வேறு, திராவிடர் கலாச்சாரம் வேறு என்பது பற்றி, ஆராய்ச்சியாளர்கள் தெளிவாகவே கூறியுள்ளனர். ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களே, முதலில் ஆரிய நாகரிகம், மொழி, கலை ஆகியவற்றினை வானளாவப் புகழ்ந்தனர். மாக்ஸ் முல்லர் எனும் ஜெர்மானியர், இப்பணியிலே ஈடுபட்டபோது, இங்கு அக்ரகாரம் ஆனந்தக் கூத்தாடிற்று!
“வேதம், ஸ்மிருதி என்பவைகளுக்கு, மேனாட்டார் எவ்வளவு மதிப்பு தருகின்றனர் பாரீர்! எமது புகழ் எங்கும் பரிவிடக் கேளீர்!” என்று பேசினர். பூரித்தனர். ஆபி டியூபா போல, ஆரிய இனத்தின் இயல்பினைக் கடிந்து கூறாமல், புகழ்ந்து பேசிய ஜெர்மன் ஆராய்ச்சியாளர் களின் புல்லறிவினைப் பொசுக்கப் புதிய ஆராய்ச்சியாளர் தோன்றலாயினர்.
இந்தியாவிலேயே முதன்முதல் நாகரிகத்தைப் புகுத்தியவர்கள் ஆரியர்தான் என்ற பொய்யுரை ஒழிய காலம் பிடித்தது. ஆரியத்தின் துணையின்றி, மிகப் பழங்காலந்தொட்டு இங்கே வளமான ஓர் நாகரிகம் ஓங்கியிருந்த உண்மையை, உலகு உணர நாட்களாயின. பண்டைத் தமிழரின் வாழ்வு பாழ்பட்டதும், வீரம் சரிந்ததும், கலை கறையானதும், நிலைகுலைந்ததும், ஆரியத்தின் கூட்டுறவால் நேரிட்ட அவதிதான் எனும் உண்மையை, உலகு முதலில் தெரிந்து கொள்ளவில்லை.
தொடரும்
