Tuesday, November 11, 2008

புதுப் பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளைத் தோழன்

இதனால சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னன்னா... திருமங்கலம் தொகுதியில் இடைத்தேர்தலை அறிவித்திருக்குது தேர்தல் ஆணையம். எம்.பி. தேர்தல் சட்டுபுட்டுன்னு வந்திடும்னு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, எரிஞ்ச கட்சி, எரியாத கட்சின்னு எல்லாக் கட்சிகளும் எதிர்பார்த்து கூட்டணியை முடிவு செய்றதுக்கு முன்னாடி, கீற்று நாமக்காரரான தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி திடுதிப்புன்னு இடைத்தேர்தலை அறிவிச்சுப்புட்டாரு. இதனால முதல் அதிர்ச்சி ம.தி.மு.க பொதுச்செயலாளர் கோபால்சாமிக்குத்தான். மன்னிக்கணும் வைகோவுக்குத்தான்.
பொதுத்தேர்தலில் ம.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்ற தொகுதி இது. அவர் (வீர.இளவரசன்)இறந்துபோனதால்தான் இடைத்தேர்தலே வந்திருக்கு. புதுப்பொண்ணுக்கு தாலி கட்டலாம்னு மாப்பிள்ளை ஆசையா இருந்த நேரத்திலே அந்தப் பொண்ணு கழுத்திலே மாப்பிள்ளைத் தோழன் தாலி கட்டிப்புட்டா எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்குது ம.தி.மு.க நிலைமை. இடைத்தேர்தலில் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க. நாங்களே போட்டிபோடுறோம்னு அ.தி.மு.க சொல்லிவிட்டதால் வைகோவுக்கு வேற வழியில்லை. புதுப்பொண்ணுக்கு மாப்பிள்ளைத்தோழன் தாலி கட்டுற நேரத்தில், வெறுப்பா ஒரு சிரிப்பு சிரிச்சிக்கிட்டு அட்சதை போடுற மாப்பிள்ளை கணக்கா இருக்காரு வைகோ.