மாற்றம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, கடவுளுக்கும்
தேவைப்படும் காலம் இது. ருக்மணிதேவி சமேதரான விட்டல் பெருமாள் 900 ஆண்டுகளாக ஒரே
தரப்பினர் சொல்லும் மந்திரத்தைத்தான் கேட்டு வருகிறார். அதுவும் இரண்டு
குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அந்த மந்திரத்தை அவருக்கு ஓத முடியும். இந்த
நிலை இப்போது மாறுகிறது. அந்த இரு பிராமண குடும்பத்தவரிடம் மட்டுமே இருந்த உரிமை
பரவலாகி, இனி பிராமணரல்லாதாரும் பெண்களும்கூட ருக்மணிதேவிக்கும் விட்டல்
பெருமாளுக்கும் பூஜை செய்யலாம் என்பதுதான் புதிய மாற்றம்.
மராட்டிய மாநிலம் புனே அருகில் பந்தர்பூரில் உள்ளது
பழமையும் பெருமையும் கொண்ட விட்டல்-ருக்மணி திருக்கோவில். ஆண்டுக்கு ஏறத்தாழ ஒரு
கோடி பக்தர்கள் இங்கு வந்துபோவது வழக்கமாக இருக்கிறது. அவர்களில்
பெரும்பாலானவர்கள் அப்பகுதியில் வலிமையான வாக்குவங்கியைக் கொண்டுள்ள வர்கரி சமுதாயத்தினர்.
கோவிலில் அபிஷேகம், ஆராதனை உள்ளிட்டவற்றை செய்யும் உரிமை கொண்டவர்கள் இரண்டு
பிராமணக் குடும்பத்தினர் மட்டும்தான். அனைவருக்கும் பொதுவான கடவுளுக்கு பூசை
செய்யும் உரிமை அனைத்துத் தரப்பினருக்கும் வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், ஒரு
தரப்பினரின் ஆதிக்கம் கூடாது எனவும் அதனை நீக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம்
2014 ஜனவரியில் உத்தரவிட்டது. இதனையடுத்து, அர்ச்சகர் பணிக்கு 129 பேர் நேர்முகத்
தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 16 பேர் பெண்கள்.
விட்டல்-ருக்மணி கோவில் அறக்கட்டளை என்பது மராட்டிய
மாநில அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது. அது அண்மையில், “பிராமணரல்லாதவர்களையும்
பெண்களையும் அர்ச்சகர்களாக அனுமதிக்க இருக்கிறோம்” என அறிவித்தது. (இது குறித்த
செய்திகள் கடந்த மாதமே விடுதலை, முரசொலி போன்ற ஏடுகளில் விரிவாக வந்துள்ளன).
தற்போது வர்கரி சமுதாயத்தினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். “அறக்கட்டளை
என்பது தற்காலிக நிர்வாகம்தான் என்றும் அது கொள்கை முடிவுகளை எடுக்கமுடியாது”
என்று அவர்கள் தெரிவித்திருப்பதுடன், அறக்கட்டளையை மாற்றி அமைக்க வேண்டும் என
மராட்டிய மாநில அரசுக்கு கோரிக்கையும் வைத்துள்ளனர். அறக்கட்டளையினரோ, புதிய
அர்ச்சகர்களை நியமிப்பது தொடர்பாக, மாநில அரசின் கருத்துக்காகக் காத்துள்ளனர்.
முடிவுகள் எடுப்பதில் சற்றுமுன்பின் தாமதமாகலாமே
தவிர, உச்சநீதிமன்றம் உத்தரவை மீறமுடியாது என்றும், பெண் அர்ச்சர்கள் உள்பட பல
சமுதாயத்தவர்களும் அர்ச்சராகும் உரிமையை யாரும் பறிக்க முடியாது என்கிறார்கள்
மராட்டிய மாநில சட்ட வல்லுநர்கள். தமிழகத்திலும் அனைத்து சாதியினரும்
அர்ச்சகராவதற்கான சட்டம் தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு, அர்ச்சகர்
பயிற்சியும் அளிக்கப்பட்டது. அப்பயிற்சியை நிறைவு செய்தவர்கள், இதுவரை அர்ச்சகராக
முடியாதபடி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில்,
அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களுக்கு நியாயம் கிடப்பதற்கான முயற்சிகளை
மேற்கொள்ளாமல் அ.தி.மு.க அரசு அலட்சியப்படுத்தி வருகிறது. அரசின் பயிற்சி
மையத்தில் பயிற்சி பெற்றும் அர்ச்சகராக முடியாமல் சம்பந்தப்பட்டவர்கள்
தவிக்கிறார்கள். விட்டல்-ருக்மணி திருக்கோவில் வழக்கின் உத்தரவை முன்னுதாரணம் காட்டியே,
தமிழகத்தில் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களுக்குரிய உரிமையை தமிழகத்தை ஆளும்
அ.தி.மு.க அரசு நினைத்தால் நிலை நாட்ட முடியும். சிதம்பரம் கோவிலை மீண்டும்
தீட்சிதர்கள் வசம் ஒப்படைக்கத் துணை நின்றவர்கள், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக
ஆர்வம் காட்டுவார்களா?
விட்டல்-ருக்மணி போன்ற ‘பெருங்கடவுளர்கள்’ உள்ள
கோவில்களிலேயே பிராமணர்கள் மட்டுமின்றி பெண்கள் உள்பட அனைவரும் அர்ச்சகராகும்
வாய்ப்பு மராட்டியத்தில் உருவாகியுள்ளது. தமிழகத்திலோ உள்ளூர் பூசாரிகள் இருந்த
மாரியம்மன் கோவில் உள்பட சிறுதெய்வக் கோவில்களில் பிராமண அர்ச்சர்களை
நியமிப்பதும், வடமொழி மந்திரங்களைச் சொல்வதும் ஃபேஷனாகிவிட்டது. அவர்கள்
ஆட்டினால்தான் மணி ஆடும் என்றும், அவர்கள் சமஸ்கிருதத்தில் உச்சரித்தால்தான்
மந்திரம் பலிக்கும் என்றும் எண்ணுகிற மனநிலைக்கு மக்கள் ஆளாகியிருக்கிறார்கள்.
தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக உச்சநீதிமன்றம் வழிகாட்டுமா? அது
வழிகாட்டினாலும், மக்களின் இந்த மனநிலையை மாற்றாமல், அனைத்து சாதியினரையும்
அர்ச்சகராக்கும் முயற்சிக்கு ஆதரவு கிடைக்குமா? ‘கடவுள்’ வந்துதான் பதில் சொல்ல
வேண்டும்.
பின் குறிப்பு- படத்தில் உள்ளது போன்ற வேலைகளைப் பெண்கள் செய்யமுடியும் என்கிறதுபோது, அர்ச்சனை செய்வதற்கு மட்டும் ஆண்டவன் அனுமதிக்கமாட்டாரா என்ன?

