குதர்க்க குறுஞ்செய்திகள் வந்து தொலைக்கிறது என்பதால் செல்பேசியில் வரும் எல்லா குறுஞ்செய்திகளையும் அலட்சியப்படுத்திவிட முடியாது. குறுஞ்செய்திகள் வாயிலாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்கத் தவறினாலும் அந்தக் கேள்விகள் தொண்டையில் சிக்கிய முள்ளாய் பாடுபடுத்துவதுண்டு.
சமீபத்தில் வந்த குறுஞ்செய்தி- “ஈழத்தில் 1 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது தமிழகத்தில் லீவு இல்லை. ஆந்திராவில் ஓர் உயிர் (ராஜசேகர ரெட்டி) போனதற்கு லீவா?” எனக் கேட்டிருந்தது. தமிழர்களின் உயிருக்கு மதிப்பில்லையா என்ற கேள்வியை எழுப்பும் இந்த குறுஞ்செய்தி, ஒரு லீவுக்காக ஒரு இலட்சம் தமிழர்கள் கொல்லப்படவேண்டும் என எதிர்பார்க்கிறதா என்ற சிந்தனையையும் கிளறியது.
ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படக்கூடாது என்பதற்காக இந்திய இறையான்மை நெருக்கடியையும் தாண்டி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஒருநாள் கடையடைப்பு நடத்தப்பட்டது. அதுபோல ஆளுங்கட்சி சார்பிலும் ஒரு நாள் பொதுவேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டு, பேருந்து போக்குவரத்து உள்பட அனைத்தும் முடக்கப்பட்டது. ஆனாலும், இந்திய அரசு, “போங்கடா.. போக்கத்தா பசங்களா” என்று தமிழகத்தை அலட்சிப்படுத்திவிட்டு, ராஜபக்சேவுடனான நட்புறவை மேம்படுத்தியது. (அப்புறமென்ன... ஆயுதம் கொடுத்ததுன்னு சொன்னா தேசிய பாதுகாப்பு சட்டத்துல உள்ள போட்டுப்புடுவாங்களே) ஈழத்தில் ஓர் உயிரைக்கூட தமிழகத்தின் போராட்டங்களால் காப்பாற்ற முடியவில்லை. அதனால் ஈழத் தமிழர்களுக்காக லீவு விட்டா என்ன, விடாங்காட்டி என்ன!
ஆட்சியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் செத்துப்போனால் ஒட்டுமொத்தத்துக்கு லீவு விடுவது நம்ம நாட்டுக்குப் புதுசல்ல. எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் முதல்வரா இருந்தாரு. ஆனா, அவரோட மரணத்துக்காக இந்தியா முழுக்க மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. டெல்லியில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தது. ஏன்னா, காங்கிரசோடு அ.தி.மு.க அப்ப அவ்வளவு நெருக்கமான உறவில் இருந்தது. அதற்கு ராஜீவ் காந்தி கொடுத்த மரியாதைதான் மரண லீவு. இப்ப காங்கிரசோடு கலைஞர் கைகுலுக்கிக்கிட்டிருக்காரு. அதற்குத் தரப்பட்ட மரியாதைதான் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மரணத்துக்கான லீவு. அதுவும் ஹெலிகாப்டர் விபத்து நடந்து 24 மணி நேரமாக என்ன ஆனார்ங்கிற சஸ்பென்ஸ் வைத்து, மரணம்னு க்ளைமாக்சில் தெரியவந்ததால் ராஜசேகர ரெட்டியின் இறப்பு செய்தி தமிழக மக்களிடமும் விவாதப் பொருளானது. அதோடு, ஒரு நாள் விடுமுறையும் கிடைத்தது.
ஆந்திர முதல்வரின் மரணத்துக்கான லீவு என்பது புதிய முன்னுதாரணமும் அல்ல. சோவியத் யூனியனின்(ரஷ்யா) அதிபராக பிரஷ்னேவ் இருந்தார். அப்புறம் இறந்தார். அவரது மரணத்துக்கு இந்தியா முழுக்கவே லீவு விட்டாங்க. அடுத்ததா ஆந்திரபோவ் அந்நாட்டுக்கு அதிபரானார். அவரும் சீக்கிரமே வானுலகம் சென்றார். அதற்கும் இந்தியா முச்சூடும் லீவு. அதற்குப் பிறகு, செர்னன்கோ அதிபரானார். அவரையும் விரைவாகத் தேடி வந்துவிட்டான் எமன். அதற்கும் நம்ம நாடு முழுக்க லீவு. ரஷ்ய அதிபர் யாருன்னு பேரை ஞாபகம் வச்சிக்கிறதுக்குள்ளேயே மூணு பேரு அடுத்தடுத்து இறந்துபோயிட்டாங்க. மூவரின் மரணத்துக்கும் இந்தியாவில் லீவு விட்டாங்க. ஆனா ரஷ்யாவில் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்திட்டு அவங்கவங்க வேலையைப் பார்க்கப் போயிட்டாங்கன்னு அப்ப பேப்பரிலே செய்தி வந்தது.
ரஷ்ய அதிபர்கள் மூவரின் மரணத்துக்கும் லீவு விட்டபோது பள்ளிக்கூடத்துப் பையனா இருந்த என்னைப் போன்றவர்கள், எப்படி கொண்டாட்டம் போட்டோமோ அப்படித்தான் ஆந்திர முதல்வரின் மரணத்துக்கு லீவு விட்டபோது எங்கள் பிள்ளைகள் கொண்டாட்டம் போட்டார்கள். அதிகம் அறியாத தலைவர்களின் மரணத்துக்கு லீவு விடுவதால் கிடைக்கும் மரியாதை இதுதான்.

2 comments:
Hello boss,
I also amazing about the public holiday. Still Mr.Reddy's death, tamilnadu ppl dont know about him. After his death he is praised as a mahatma. It is comparable to Sarvagnar Statue politics. lets see the fruit of Kalignar's diplomatic moves in the Paalaaru Dam issue.
cheers
durai
Very interesting..
We are borne to symbathise others..
We take pride on this also..
Hence no leave on Srilankan issue,
But got leave on all other issues!!
Post a Comment