சிங்கள அரசு ஒரு விஷயத்தில் மட்டும் இனப்பாகுபாடு பார்ப்பதில்லை. அரச பயங்கரவாதத்திற்கு எதிராகப் பேனா பிடிப்பவர்கள் தமிழர்களாக இருந்தாலும் சிங்களர்களாக இருந்தாலும் வெளிநாட்டவராக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் ஒரே இனமாகத்தான் பார்த்துப் பதறுகிறது. அந்தப் பதற்றத்தின் கொடூர விளைவு... ... கைது, சிறை, கடத்தல், தாக்குதல், கொலை என நீள்வது வழக்கமாக இருக்கிறது. ஜெயப்பிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகம் விளைவுக்குள்ளானோர் பட்டியலில் இப்போது கடைசியாக இருப்பவர்.
அவர் செய்த குற்றம்?
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் ராஜபக்சே அரசு செய்த இன அழிப்பை ஒரு பத்திரிகையாளராக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததுதான். அரச பயங்கரவாதத்தின் உண்மை முகத்தைச் சொல்பவர்கள் எல்லோரும் ராஜபக்சே அரசின் அகராதியில் பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள். திசைநாயகத்திற்கும் அதே பட்டம்தான். இந்தப் பட்டத்துடன் சேர்த்துக் கிடைத்திருக்கும் பரிசு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை. உண்மையை உரக்கச் சொன்னதால் சிங்கள அரசால் கைது செய்யப்பட்டு, கைவிலங்கிடப்பட்டு, சிறையிலடைக்கப்பட்ட திசைநாயகத்திற்கு, கொழும்பு நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்திருக்கிறது. திசைநாயகத்திற்கு சிறை. ஜனநாயகத்திற்கு தூக்கு. இதுதான் இலங்கை ‘ஜனநாயக குடியரசின்’ நிலைமை.
ஒரே நாட்டில் வாழும் சிங்களர்களையும் தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் மற்றவர்களையும் ஒரே தரத்திலான குடிமக்களாக நடத்தவேண்டும் என எழுதுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர் மீது பயங்கரவாத முத்திரையைக் குத்திவிடுகிறது ஜனநாயகத்தின் பெயரில் பயங்கரவாத ஆட்சி நடத்தும் இலங்கை அரசு. அதில் நண்பர்கள், எதிரிகள் என்ற பேதம் பார்ப்பதில்லை. தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர் சிங்கள இனத்தவரான சண்டே லீடர் இதழின் ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்கே. தன்னுடைய 20 ஆண்டுகால நண்பர் என்றுகூட பார்க்காமல் அரச கூலிப்படைகள் மூலமாக லசந்தாவை சுட்டுக் கொல்லச் செய்தார் ராஜபக்சே. நண்பருக்கே இந்த கதி என்றால் மற்றவர்களின் நிலைமை?
சிரசா டி.வி நிலையம் தாக்கப்பட்டது. ஒரு பத்திரிகையாளரும் அவரது மனைவியும் கத்தியால் குத்தப்பட்டனர். மட்டக்களப்பில் ஒரு பத்திரிகையாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடந்தது. குடும்ப விழாவில் கலந்துகொண்ட சுடர் ஒளி வைத்தியநாதன் கடத்தப்பட்டு, தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டு விசாரணை எதுவுமின்றி 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இலங்கையின் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொடல்லா ஜெயந்த வேனில் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டார். அவருக்கும் தீவிரவாத ஆதரவு முத்திரைதான். கொலைச் சதியில் ஈடுபட்டதாக 3 சிங்கள பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கருத்து சுதந்திரத்தின் கழுத்து நெரிக்கப்படும் நாடுகளில் இலங்கை முன்வரிசையில் இருக்கிறது. தெற்காசியாவில் அதற்கே முதலிடம். அரச பயங்கரவாதத்திற்குப் பயந்து பல பத்திரிகையாளர்கள் வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டார்கள். இலங்கையில் இருக்கும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களோ, அமைச்சர்களாலும் அரசு அதிகாரிகளாலும் பகிரங்கமாக மிரட்டப்படுகிறார்கள். மகிந்த ராஜபக்சேவின் சகோதரரும் பாதுகாப்பு துறை செயலாளருமான கோத்தபய ராஜபக்சே, ‘பொறுப்பற்ற‘ முறையில் செயல்வடும் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள நாட்டைவிட்டு துரத்தப்படுவார்கள் நேரடியாகவே மிரட்டுவது வழக்கமாக இருக்கிறது.
1973இல் தற்காலிகமாக அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கை அரசின் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் பத்திரிகையாளர்களைக் கைது செய்வது இன்றளவும் தொடர்ந்து வருவதை அந்நாட்டு பத்திரிகை அமைப்புகள் கண்டித்து குரல் எழுப்பி வருகின்றன. எழும் குரல்களை நசுக்குவதே தன் கடமை என செயல்படுகிறது இலங்கை அரசு.
ஊடகங்களின் குரல் அறுக்கும் ராஜபக்சே அரசை உலகளாவிய அளவில் அம்பலப்படுத்தி, சர்வதேச அழுத்தத்தின் மூலம் இலங்கையில் கருத்து சுதந்திர காற்றினை வீசச் செய்ய வேண்டியதே தமிழகத்தில் உள்ள ஊடகவியலாளர்களின் தற்போதைய அவசரக் கடமை. அதனையொட்டிய செயல்திட்டங்கள் வேகம் பெற்றிருப்பது ஆறுதலாக உள்ளது. ஏற்கனவே மோசமாக உள்ள இலங்கை பத்திரிகை சுதந்திரம், திசைநாயகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை மூலமாக படுமோசமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது என நேபாளத்தில் நடந்த தெற்காசிய ஊடகங்களுக்ககான sams அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சிங்கள இனவெறி-ஜனநாயக விரோத அரசுக்கு எதிரான குரல்கள் இன்னும் அதிகமாக ஒலிக்க வேண்டிய தருணம் இது. ராஜபக்சே அரசால் நசுக்கப்படமுடியாத அளவுக்கு இந்த குரல்கள் ஓங்கி ஒலிக்கவேண்டும். திசைநாயகம் விடுவிக்கப்படவேண்டும். தூக்கு மரத்தடியில் நிற்கும் ஜனநாயகத்தை மீட்டெடுக்க உலகளவிலான முயற்சிகள் வலிமை பெற வேண்டும். அப்பாவி மக்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியாமல் போன நம்மால், ஊடகங்களின் உரிமைகளையாவது மீட்க முடியும் என நம்புவோம்.
அக்கப்போரு மொக்கராசு
தேசிய அளவில் சிறந்த படம், காஞ்சிவரம். மாநில மொழிப் படங்களில் தமிழில் சிறந்த படம், பெரியார்.
அப்படின்னா... காஞ்சிவரம் தமிழ்ப் படம் இல்லையா? இங்கிலீசு படமா? பொதுத்தேர்வில் ஒரு மாணவன் பள்ளிக்கூடத்திலேயே முதல் மாணவனா வரும்போது, அவனது வகுப்பில் மட்டும் இன்னொருத்தன் முதல் மாணவனாக வருவானா? தேசிய விருதுக்கு என்ன அளவுகோல்?
எப்படியோ 2 தமிழ்ப்படத்துக்கு அவார்டு கிடைச்சிடிச்சி... அதுக்கு சந்தோசப்படுவோம்.
Wednesday, September 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
hi comrade,
all your posts are very good..
Keep writing.. i like your first post.. the langangue is very good..
refered to me by AARA..
வணக்கம் தோழர் ராகுல் ஆனந்த்
தங்கள் மதிப்பீட்டிற்கு நன்றி. தொடர்பில் இருங்கள். உரத்து குரல் கொடுப்போம்.
Post a Comment