
சுயமரியாதை-மாநில சுயாட்சி- மனித உரிமை- தாய்மொழிக்கான தனித்துவம் இவற்றை அடிப்படையாகக் கொண்டது அண்ணாவின் அரசியல் தளம். அவருடைய நூற்றாண்டு 2008 செப்டம்பர் 15ல் தொடங்கி 2009 செப்டம்பர் 15ல் நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் அண்ணா உருவாக்கிய அரசியல் சூத்திரத்தின் அடிப்படையில்தான் திராவிட கட்சிகள் அரசியல் செல்வாக்கு பெற்றன.
அண்ணா உருவாக்கிய தி.மு.க, அண்ணா பெயரிலான அ.தி.மு.க, அண்ணா கனவு கண்ட மறுமலர்ச்சியை உருவாக்கப்போவதாகச் சொல்லி உருவான ம.தி.மு.க இவை திராவிடக் கட்சிகள் என அழைக்கப்படுகின்றன. தேசிய முற்போக்கு திராவிட கழகம் உள்பட, பெயரில் திராவிடத்தை தாங்கியுள்ள கட்சிகளும் உண்டு. இவர்களில் அண்ணா நூற்றாண்டை பயனுள்ளதாகக் கொண்டாடிய கட்சி எது?
தே.மு.தி.கவின் நிகழ்ச்சிகளுக்கான விளம்பரங்களில் அண்ணா படம் இடம்பெறவேண்டும் என கட்சி மேலிடம் உத்தரவிட்டது. அதன்படி தொண்டர்கள் செயல்பட்டனர். இதுதான் அக்கட்சியின் அண்ணா நூற்றாண்டு விழா. ம.தி.மு.க சார்பில் அண்ணா நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் அதனால் பரவலான தாக்கத்தையும் கவனிப்பையும் ஏற்படுத்தும் அரசியல் சூழல் இப்போது இல்லை. அண்ணா பெயரிலான அ.தி.மு.க குடிகொண்டிருப்பது கொடநாட்டில். அதனால் அண்ணா சிலைக்கு மாலை போடுவது, பொதுக்கூட்டம் நடத்துவது என்பதுடன் அ.தி.மு.கவின் கடமை முடிந்துவிட்டது. அண்ணாவால் உருவாக்கப்பட்டு, அவரிடம் அரசியல் பயின்ற கலைஞரால் வழிநடத்தப்படும் தி.மு.கவுக்குத்தான் விழா நடத்துவதற்கு அதிக உரிமையும் பொறுப்பும் இருக்கிறது. அதுவும் தி.மு.க தற்போது ஆட்சியில் இருப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்புகள் அதிகம்.
தமிழக அரசின் சார்பில் அண்ணா நூற்றாண்டு விழா மலர் வெளியீடு, அண்ணாவின் உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய் நாணயம் வெளியீடு என சிறப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் அண்ணா குறித்த கருத்தரங்கம், படக்காட்சி, நூல் வெளியீடு போன்ற நிகழ்ச்சிகள் கடந்த ஓராண்டில் நடந்துள்ளன. ஆய்வரங்கங்களும் நடத்தப்பட்டுள்ளன. அரசு சார்ந்த துறைகளின் சார்பாகவும் அண்ணா நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் பல நடைபெற்றுள்ளன.
தி.மு.க என்ற அரசியல் இயக்கம் 2008 செப்டம்பர் 21ஆம் நாள் திருச்சியில் முப்பெரும்விழா நடத்தியது. இதுதான் அக்கட்சியின் சார்பிலான அண்ணா நூற்றாண்டு விழா தொடக்கம். விழாவில் பேசிய கூட்டணிக் கட்சித் தலைவரான தங்கபாலு, ஆட்சியில் பங்கு பற்றி ஏதேதோ சொல்லித் தொலைக்க, கலைஞரின் பேச்சில் தங்கபாலுவுக்கு பதில் சொல்லவே நேரம் சரியாக இருந்தது. அதன்பின், நவம்பரில் கோவையிலும் 2009 ஜனவரியில் திருநெல்வேலியிலும், மார்ச்சில் சேலத்திலும், மே மாதத்தில் தஞ்சையிலும், ஜூன் மாதத்தில் மதுரையிலும், ஜூலையில் காஞ்சியிலும், செப்டம்பரில் சென்னையிலும் அண்ணா நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடத்த தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. நடந்தனவா?
காங்கிரசுடன் கூட்டணியில் இருப்பதால், ஈழத்தமிழர் விவகாரத்தில் தடுப்பாட்டம் ஆடவேண்டிய சூழலுக்கு தி.மு.க தள்ளப்பட்டதாலும், அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல் ஆகியவற்றில் காங்கிரசையும் சுமந்துகொண்டு களம் காண வேண்டியிருந்ததாலும் திட்டமிட்டபடி அண்ணா நூற்றாண்டு நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. ஆக, அண்ணாவை தி.மு.க முழுமையாகக் கொண்டாடமுடியாதபடி தடுத்துவிட்ட பங்கு ஒருவிதத்தில் காங்கிரசையே சாரும்.
தி.மு.க கட்சித்தலைமையின் விழாக்கள் பல சூழல்களால் நடைபெறமுடியாமல் போனாலும் தி.மு.கவில் உள்ள பல்வேறு அணிகளின் சார்பிலான அண்ணா நூற்றாண்டு விழாக்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடைபெற்றுள்ளன. அதில் முக்கியமானது, இளைஞரணியின் சார்பில் நடத்தப்பட்ட அண்ணா நூற்றாண்டு தொடக்கம் மற்றும் நிறைவு விழாவையொட்டி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சு-கட்டுரை-கவிதை போட்டிகள்.
பெரியார், காமராஜர், அண்ணா இவர்களெல்லாம் யார் என்று கேட்கும் ஒரு தலைமுறை உருவாகியுள்ள நிலையில், இன்றைய மாணவர்களின் மனதில் அண்ணாவைப் பதிய வைக்கும் ஒரு முயற்சியாக மாவட்டந்தோறும் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் மூலமாக ஒரு புதிய தலைமுறைக்கு அண்ணாவை அறிமுகம் செய்துவைத்த பணியை செய்திருக்கிறது தி.மு.க இளைஞரணி. இது ஒரு தொடக்கம். அதுபோல, திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், அண்ணா பற்றாளர்களால் நடத்தப்படும் தனி அமைப்புகள் சார்பிலும் பல நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டதும் வரவேற்புக்குரிய பணி.
இந்நிலையில், அண்ணாவை அறிந்துகொள்ளாத தலைமுறை மட்டுமின்றி, அண்ணாவின் அரசியல் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளாமல் முற்றாக விமர்சிக்கும் தலைமுறையையும் காண முடிகிறது. இவர்களுக்கு அண்ணாவை சரியாகப் புரியவைக்கக்கூடிய முயற்சிகளை அண்ணா நூற்றாண்டில் திராவிட அரசியல் கட்சிகள் மேற்கொண்டனவா என்ற கேள்வி எழுகிறது.
கால மாற்றங்களினால் கருத்து மாற்றமும் ஏற்படுவது வழக்கம். இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து இருமொழிக் கொள்கையை அண்ணா கொண்டு வந்தார். படித்து முன்னேறியுள்ள இன்றைய தலைமுறையினரிடம், இந்திக்கு இடமில்லாத காரணத்தால் தமிழகம் இந்தியாவிலேயே தனித்தீவாகிவிட்டது என்ற கருத்து பரப்பப்பட்டுள்ளது. இது சரியானதுதானா?
கம்பராமாயணம், பெரியபுராணம் உள்ளிட்ட இலக்கியங்களின் கருத்துகளுக்கு எதிராக பெரியார்- அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் மேற்கொண்ட போராட்டங்களால் இன்றைய தலைமுறைக்கு பக்தி இலக்கியத்தின் சிறப்புகளும் அவற்றின் மொழி ஆளுமையும் தெரியாமல் போய்விட்டன என்ற குற்றச்சாட்டு சரியானதுதானா?
காவிரி-பாலாறு- முல்லைப்பெரியாறு என அண்டை மாநிலங்களுடன் தண்ணீர் சிக்கல் நீடிக்கும் நிலையில் அண்ணா வலியுறுத்திய மாநில சுயாட்சிக் கொள்கையில் என்ன முன்னேற்றத்தை இன்று நாம் கண்டுள்ளோம்?
இத்தகையக் கேள்விகளை ஒட்டிய விவாதங்களைத் தொடங்குவதே அண்ணா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு சிறப்பையும் பயனையும் உருவாக்கும். திராவிட அரசியல் கட்சிகளிடம் உள்ள தொலைக்காட்சி ஊடகங்களில் இத்தகைய விவாதங்கள் இடம்பெறும் என நாம் நம்பி ஏமாறுவதைவிட, இணையதளங்கள், வலைப்பதிவுகள், பொதுநிகழ்ச்சிகள் மூலமாக இந்த விவாதங்களைத் தொடங்கலாம்.. தொடரலாம். அதுவே, அண்ணாவின் கொள்கைகளையொட்டிய பயணமாக இருக்கும்.
எனது வலைப்பதிவில் அதற்கான கடை விரிக்கப்பட்டுள்ளது. கொள்வோர் கொள்ளலாம்.
- - -
அக்கப்போரு மொக்கராசு
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக தி.மு.க அரசு கொண்டாடுகிறது. அண்ணா நூற்றாண்டு விழாவை தமிழக காங்கிரசார் கொண்டாடுவதாகத் தெரியவில்லையே... அந்தளவுக்கு பரந்த மனப்பான்மையை காங்கிரசாரிடம் எதிர்பார்க்க முடியுமா? கொண்டாடினாலும் எந்தக் கோஷ்டி கொண்டாடுவது என சட்டையையும் வேட்டியையும் கிழித்துக் கொள்வார்களே!
தமிழக இடதுசாரி இயக்கங்கள் சார்பில் திராவிட இயக்கத்துடன் தொடர்புடைய கலைவாணர் என்.எஸ்.கே, நடிகவேள் எம்.ஆர்.ராதா ஆகியோரின் நூற்றாண்டு விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. அண்ணா நூற்றாண்டு விழாவை மட்டும் கண்டு கொள்ளவேயில்லையே காம்ரேடுகள்! அண்ணா என்றால் தீண்டாமையோ!

2 comments:
illa lenin indha pattiyalodu thandhai periyaarin 125 aam aandinayum migundha cherivodu idadhu saarigalum avargaladhu kalai ilakkiya amaippugalum adhilum kurippa tha.mu.e.savum kayileduththanar.
surukkamaai ippadi mudikkalaam lenin
pattialidapptta dhiraavida kalaigngrgalai dhiraavida iyakkangal kandukkaadhadhal idadhusaarigal kayiledukka vaendiya thaevai irundhadhu
ippodhu andha thaevai illai enbadhu kooda kaaranamaai irukkalaam
வனக்கம் லெனின்.நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பட்டியலோடு தந்தை பெரியாரயும் சேர்த்துக் கொள்ளலாம். தந்தை பெரியாரின் 125 ஆவது பிறந்த நாளையும அந்த ஆண்டு முழுமையும் மிகுந்தச் செறிவோடு இடதுசாரிகளும் அவர்களது கலை இலக்கிய அமைப்புகளும் ,அதில்ங்குறிப்பாக த.மு.சவும் நடத்தினர். பட்டியலிடப் பட்ட திராவிடக் கலைஞர்களை திராவிட இயக்கங்கள் போதுமான அளவு கண்டு கொள்ளாததும் அண்ணா விஷயத்தில் அந்தத் தேவையை இடதுசாரிகளுக்கு திராவிட இயக்கத்தவர் வைக்கவில்லை என்பதும் கூட கொள்ளப் படவேன்டியவையே
Post a Comment